andra's vijayakanth - who is balakrishna?

ஆந்திராவின் விஜயகாந்த்… யார் இந்த பாலகிருஷ்ணா?

அரசியல்

ஆக்சன் காட்சிகளுக்கு பெயர் போனது ஆந்திராவின் தெலுங்கு சினிமா… தற்போது அது அரசியலிலும் கடந்த சில நாட்களாக மையம் கொண்டு அதகளப்படுத்தி வருகிறது.

காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் கண்ட தமிழ்நாட்டு அரசியலில் நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஆக்சன் களமாக மாறியது.

கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய விஜயகாந்துக்கும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

அப்போது அதிமுக உறுப்பினர்களைப் பார்த்து நாக்கைத் துருத்தி, உதடுகளைக் கடித்து, நரம்பு புடைக்க கைகளை ஆவேசமாக வீசியபடி ‘தூக்கி அடிச்சிருவன் பாத்துக்க’  என்று தனது வழக்கமான பாணியில் ஏதோ பேசினார் விஜயகாந்த்.

அதற்கு பின்னரும், முன்னரும் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் அதுபோன்று எவ்வளவோ சம்பவங்கள் நடந்திருந்தாலும், அன்றைய விஜயகாந்தின் கட்டுங்கடங்காத கோபம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் பாயும் பாலைய்யா! 

அதிலிருந்து 10 ஆண்டுகள் கழித்து தற்போது ஆந்திர சட்டமன்றத்திலும் அதே போன்றதொரு காட்சியை அரங்கேற்றியுள்ளார் ஆந்திராவின் விஜயகாந்தான ‘பாலைய்யா’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்னா.

ஆந்திராவில் அடுத்தாண்டு  நாடாளுமன்ற தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ஆந்திர எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ரூ.300 கோடி ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 21ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது உணர்ச்சி வசப்பட்ட பாலைய்யா, ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபுவை நோக்கி ’தொடையைத் தட்டி மீசையை முறுக்கி’ சவால் விடுத்தார்.  அதற்கு ”இதையெல்லாம் சினிமாவில் வைத்துக்கொள்ளுங்கள், இங்கே வேண்டாம். தைரியம் இருந்தால் அருகில் வாருங்கள்” என்று பதிலடி கொடுத்தார் அமைச்சர் அம்பாதி ராம்பாபு.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆந்திர சட்டமன்ற  சபாநாயகர் தம்மினேனி சீதாராம், சபைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்று பாலகிருஷ்ணாவைக் கண்டித்து எச்சரித்தார்.

மேலும் ஒரேநாளில், தெலுங்கு தேசம் கட்சியில் 15 எம்.எல்.ஏ-க்களையும், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரையும் இடை நீக்கம் செய்தார்.

சரி முதல் நாள் தான் இப்படி என்றால், செப்டம்பர் 22 இன்று  சட்டப்பேரவைக்கு கையோடு விசில் ஒன்றைக் கொண்டு வந்த பாலகிருஷ்ணா, அவைக்கு நடுவே வந்து அந்த விசிலை ஊதி அலப்பறை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா அரசியலில் இப்படி அடாவடி அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள  இந்த பாலகிருஷ்ணா யார்? அவரது பின்னணி என்ன என்று விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!

யார் இந்த பாலைய்யா?

ஆந்திராவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையெல்லாம் தாண்டி, தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி ஆந்திர பிரதேசத்தின் முதல்-அமைச்சராக 3 முறை பதவி வகித்தவர் என்.டி.ராமராவ். ஆந்திர மக்கள் மக்கள் மனதில் அம்மாநிலத்து எம்.ஜி.ஆராக சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் அவர்.

அந்த என். டி. ராமராவின் ஆறாவது மகன் தான் நந்தமுரி பாலகிருஷ்ணா என்ற பாலைய்யா. ஜூன் 10, 1960ல் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் பிறந்த அவரது குழந்தைப் பருவம் முழுவதும் சென்னையிலேயே கழிந்தது.

பின்னர் தனது இளமைப் பருவத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா பிரிவினையின் போது  தெலுங்குத் திரையுலகம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஹைதராபாத் சென்றார். அங்குள்ள நிஜாம் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார் பாலகிருஷ்ணா.

இதற்கிடையே  தனது 14வது வயதில் குழந்தை நட்சத்திரமாக 1974ஆம் ஆண்டு வெளிவந்த தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் தனது அப்பா புகழோச்சிய அதே தெலுங்கு திரையுலகில் பாலகிருஷ்ணா அறிமுகமானார்.

அதன்பின் தன வீர சூர கர்ணா (1977), ஸ்ரீ மத்விரத பர்வம் (1979), அக்பர் சலீம் அனார்கலி (1979) மற்றும் ஸ்ரீ திருப்பதி வெங்கடேஸ்வர கல்யாணம் (1979) உள்பட தனது தந்தை இயக்கிய பல படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

இந்த நிலையில்  1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்ட பாலகிருஷ்ணா, 1984ல்,  சஹசமே ஜீவிதம் மூலம் முதன்முறையாக ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமானார்.

அதற்கு அடுத்த ஆண்டில் மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் பர்யபார்த்தல பந்தம் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.

அதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பாலகிருஷ்ணா, மங்கம்மாகரி மணவாடு,  அபூர்வ சஹோதருலு, முதுல மாவய்யா, நரி நரி நடுமா முராரி, சிம்ஹா, அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய பல படங்களை கொடுத்துள்ளார்.

வயது 62ஐ கடந்த போதும் நடிகராக, இயக்குநராக திரையில் இன்றளவும்  பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை ஈட்டும் பாலகிருஷ்ணா, அவரது ஆக்சன் மற்றும் நடன காட்சிகளுக்காக தெலுங்கு திரையுலகம் தாண்டி விமர்சிக்கப்படும் முன்னணி நடிகராகவும் உள்ளார்.

ரஹ்மானா? பாலைய்யாவா?

ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அடித்தளமிட்டவரும் அவரே தான். ஆம் கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாலைய்யா, ”AR ரஹ்மான் யார் என்று தனக்குத் தெரியாது. அவருடைய சாதனைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹிட் கொடுத்து ஆஸ்கர் விருதை பெறுவாரே… அவரா?” என்று நக்கலாக விமர்சித்தார்.

இத்தனைக்கும், 1993 ஆம் ஆண்டு  பாலைய்யா நடித்த ’நிப்பு ரவ்வா’ படத்தின் இசையமைப்பாளர்களில் ஏஆர் ரஹ்மானும் ஒருவர்.

ஆனால் சர்ச்சைக்கு பெயர் போன பாலகிருஷ்ணா பேச்சால் கொதிப்படைந்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள், பாலைய்யாவின் அளவுக்கு மீறிய படு பயங்கரமான ஸ்ட்ண்ட் மற்றும் நடன காட்சிகளை எல்லாம் சமூகவலைதளங்களில் வெளியிட்டு #WhoIsBalakrishna என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

ஒருகட்டத்தில் இது தமிழ் தெலுங்கு ரசிகர்கள் இடையே மோதலாகவும் வெடித்தது. அதிலும் குறிப்பாக பாலகிருஷ்ணா நடித்த ‘பல்னாடி பிரம்மநாயுடு’ படத்தில் வீர வசனம் பேசி தொடையைத் தட்டி கையை நீட்டுவார். அப்போது எதிரே வரும் ரயில் பின்னோக்கி செல்லும் அந்த காட்சி அப்போது பெரியளவில் கிண்டலடிக்கப்பட்டது.

இதனை பாலகிருஷ்ணா கண்டுகொள்ளாத நிலையில், அப்படத்தின் இயக்குனர் கோபால், ”இப்படி காட்சிகள் வைத்ததற்காக நான் வருந்துகிறேன். அதற்கான மொத்த பழியையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஆளை விடுங்க!” என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு சென்றது.

andra's vijayakanth - who is balakrishna?

நிழல் போல் தொடரும் சர்ச்சைகள்!

எனினும் தனது பேச்சாலும் செய்கையாலும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி மீடியாவின் வெளிச்சத்தில் இருந்து வருகிறார் பாலகிருஷ்ணா.

ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்த போது, அதைத் தூக்கி எறிந்தார்.

பின்பு மற்றொரு நிகழ்ச்சியில் அவருடன் போட்டோ எடுக்க குழந்தையுடன் ஒரு ரசிகர் சென்றார். அப்போது அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. ’போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் தூங்குறியா?’னு கேட்டு அந்த குழந்தையை பாலகிருஷ்ணா அடித்து எழுப்பினார். இந்த வீடியோவும் வைரலாகி பாலய்யாவுக்கு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணா கையில் மது கோப்பையுடன் நடிகை ஹனிரோசுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு ஒருமையில் மரியாதை குறைவாகப் பேசினார். இதற்கு நாகர்ஜூனா தரப்பில் அவரது மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் கடும் கண்டனம் தெரிவிக்க, பின்னர் மன்னிப்பு கோரினார் பாலகிருஷ்ணா.

இந்தாண்டு பிப்ரவரியில் அவர் தொகுப்பாளராக பணியாற்றிய தனியார் டிவி நிகழ்ச்சியில்,  ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார்.  அப்போது தனக்கு ஏற்பட்ட பழைய விபத்து ஒன்றை நினைவு கூர்ந்தார் பாலகிருஷ்ணா. அவர், ”கல்லூரி படிக்கும்போது ஒருமுறை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், அங்கு ஒரு  ‘அழகான’ நர்ஸைப் பார்த்ததும், “தினம்மா பலேக உண்டி அக்காடி நர்ஸ் (நீங்கள் ரொம்ப கவர்ச்சியாக இருக்கிறீர்கள்)” என்று கூறினேன்” என்று சிரித்தபடியே பேசியிருந்தார்.

இது சர்ச்சையான நிலையில், பாலகிருஷ்ணா அந்த நிகழ்ச்சியில் தங்களை அவமதித்ததாக செவிலியர்கள் குற்றம் சாட்டினர்.  அதற்கு அவர், ”செவிலியர்களை இழிவுபடுத்தும் வகையில் சிலர் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் செவிலியர்கள் எல்லோரும் என் சகோதரிகள்” என்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

andra's vijayakanth - who is balakrishna?

அரசியல் அதிரடியா? அடாவடியா?

இதற்கிடையே தனது தந்தையின் வழியில் அரசியல் களத்தில் குதித்த பாலகிருஷ்ணா நம்மூர் விஜயகாந்துக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) நிறுவியதில் இருந்து, பாலகிருஷ்ணா ஒவ்வொரு தேர்தலிலும் அதற்காக பிரச்சாரம் செய்தார்.

ஆனால் முதன்முறையாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக இருந்த இந்துபூர் தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரது தந்தை ராமராவ்வும், பின்னர் அவரது சகோதரர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவும் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2019ஆம் ஆண்டும் அதே  தொகுதியில் போட்டியிட்டு 17,028 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாக தொடர்கிறார்.

அவரது வெற்றி ரெக்கார்ட் அப்படி இருக்க, சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு பாலகிருஷ்ணா வந்திருந்தார். அங்கு அவர் வருவது குறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை பார்க்க கூடினர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் திடீரென பாலகிருஷ்ணாவின் அருகில் சென்று போட்டோ எடுக்க முயன்றார்.

இதனால் கோபமடைந்த பாலகிருஷ்ணா அந்த ரசிகரை கடுமையாக திட்டி பிறகு ஓங்கி அடித்தார். இந்த வீடியோ சமூகவலைதவளங்களில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளானார்.

andra's vijayakanth - who is balakrishna?

கூட்டணியால் அதிகரித்துள்ள பலம்!

இவ்வாறு சினிமாவிலும் அரசியலிலும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பாலகிருஷ்ணா, தனது மச்சானும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திர பாபு நாயுடுவின் கைதை எதிர்த்து தற்போது குரலெழுப்பி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டமன்றத்திலேயெ தொடை தட்டி, மீசை முறுக்கி, விசில் அடித்து அலப்பறை ஆக்சன் செய்து வருகிறார்.

வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும் பவன் கல்யாணின் ஜனசேனாவும் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் பலம் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வரும் நாட்களில் கடும் போராட்டம் நடத்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

எனவே அடுத்த 8 மாதங்களுக்கும் பாலகிருஷ்ணாவின் அரசியல் அதகளத்திற்கு குறைவிருக்காது என்று நம்பப்படுகிறது.!

கிறிஸ்டோபர் ஜெமா

நெல்லை – சென்னை வந்தே பாரத் : கட்டணம் எவ்வளவு தெரியுமா? 

மூக்கு உடைந்தாலும் கோவையில் வந்து நிற்பேன் : கமல்

+1
0
+1
4
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *