முன்னாள் முதல்வரின் கடைசித் தேர்தல்: விமர்சித்த இந்நாள் முதல்வர்
ஆந்திர முன்னாள் முதல்வரின் கடைசித் தேர்தல் குறித்த கருத்தை, இந்நாள் முதல்வர் விமர்சித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு நடைபெற்ற பேரணியில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு,
“கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சட்டசபை கூட்டத்தொடரின்போது, முதல்வர் ஜெகனும் அவரது கட்சியினரும் என் மனைவி பற்றி தரக்குறைவாக விமர்சித்தனர்.
அப்போது ‘மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால்தான் சட்டசபைக்குள் நுழைவேன்’ என சபதம் எடுத்தேன்.
இப்போதும் அதில் உறுதியாக உள்ளேன். நான் சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்றால்.. நான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால்.. ஆந்திர மாநிலத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இல்லையெனில், அதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்” எனப் பேசியிருந்தார்.
அவருடைய பேச்சு ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்த நிலையில் இதற்குப் பதிலளித்திருக்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி,
“சிலா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, செல்லிடப்பேசி கோபுரம் ஆகியவற்றில் ஏறி நின்றுகொண்டு தற்கொலை மிரட்டல் விடுப்பாா்கள். சிலா் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டுவாா்கள்.
அதே பாணியில்தான், ‘2024 தோ்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால், அதுவே எனது கடைசி தோ்தல்’ என சந்திரபாபு நாயுடுவும் பேசியுள்ளாா்.
அவா் எந்த அளவுக்கு பதவி ஆசை மிக்கவா் என்பதையே இது வெளிக்காட்டுகிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு கடந்த தோ்தலில் மக்கள் வழியனுப்பு விழா நடத்திவிட்டாா்கள்.
அதைத் தொடா்ந்து உள்ளாட்சித் தோ்தல், இடைத் தோ்தலிலும் மக்கள் அவரது கட்சியைப் புறக்கணித்துவிட்டாா்கள்.
எனவே, அடுத்த தோ்தலில் தனது தொகுதியில்கூட வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுந்துள்ளது. இதன் விளைவாகவே ‘கடைசி தோ்தல்’ என்ற பிரசார உத்தியை அவா் கையில் எடுத்துள்ளாா்” என்றாா்.
ஜெ.பிரகாஷ்
உலகக்கோப்பை: ஈரானை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து!
மோர்பி பால விபத்து: உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!