தமிழ்நாட்டில் மது விலக்கு கொண்டுவரக் கோரி விசிக மாநாடு நடத்தும் நிலையில், ஆந்திராவில் ரூ.99க்கு மது கிடைக்கும் வகையில் புதிய மதுபான கொள்கைகளுக்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் மதுபான கொள்கை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மதுபான கொள்கை இருக்கிறது.
இந்த நிலையில் ஆந்திரா தலைநகர் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று (செப்டம்பர் 18) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, புதிய மதுபான கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி பேசுகையில், “புதிய மதுபான கொள்கை ஆந்திராவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நிர்வாகத் திறனை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மதுபான விற்பனைக்கு தனியார் சில்லரை விற்பனை முறையை கடைப்பிடிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதன்படி லாட்டரி முறையில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்படும். உரிமம் ஒதுக்கப்பட்ட பிறகு எல்லா இடங்களிலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
உரிமக் கட்டணம் ஏரியாவை பொறுத்து மாறுபடும். ரூ.50 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை நான்கு அடுக்குகளில் உரிமை கட்டணம் இருக்கும். கடை உரிமையாளர்கள் தங்கள் விற்பனையில் 20 சதவீத லாபத்தைப் பெறுவார்கள். மாநிலத்தில் உள்ள 3,736 சில்லறை விற்பனை நிலையங்களில், 10 சதவீதம் கள் வெட்டுவோர் சமூகத்திற்கு ஒதுக்கப்படும்.
மேலும், தனியாக பிரீமியம் கடைகளுக்கு பெர்மிட் வழங்கப்படும். 12 பிரீமியம் கடைகளுக்கு 5 ஆண்டுகள் உரிமம் வழங்கப்படும். இந்த பிரீமியம் கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.15 லட்சமாகவும், உரிமக் கட்டணம் ரூ.1 கோடியாகவும் இருக்கும். அதேநேரம் திருப்பதியில் பிரீமியம் கடைகள் அனுமதிக்கப்படாது.
இந்த புதிய கொள்கை மூலம் 180ml அளவில் (குவார்ட்டர்) எந்த பிராண்ட் மதுவையும் ரூ.99க்கு வாங்க முடியும்.
முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு மதுபானக் கொள்கையைத் தவறாகக் கையாண்டது. இதனால் ஆந்திர அரசுக்கு 18,860.51 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. தரமற்ற மதுவை வழங்கியதால், உடல்நலக் குறைவும் ஏற்பட்டது.
இதை எல்லாம் சரி செய்யும் விதமாகவே இப்போது புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்துள்ளோம். குறைந்த விலையில் மது கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளுக்கான உரிமம் வெளிப்படையாகவும், தரமான மதுபானம் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்” என பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த முடியாது”: ஸ்டாலின்
போக்சோவில் ஜானி மாஸ்டர் அதிரடி கைது… ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்த பின்னணி!
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடனும்னு சொல்ற சங்கிமக்கள், ஆந்திராவின் மதுபானக் கொள்கைக்கு என்ன சொல்றாய்ங்க?