ஆந்திர மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் தேர்தல் அரசியலில் பங்கேற்று வரும் நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 21 சட்டமன்ற தொகுதி, 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இதில் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி.
இந்திய திரையுலகில் திரை கலைஞர்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்பதை முதல் முறையாக தொடங்கி வைத்தது திராவிட முன்னேற்ற கழகம். 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சென்னை மாகாணத்திற்கான சட்டமன்ற தேர்தலில் தேனி சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் இந்திய தேர்தல் வரலாற்றில் திரைப்பட நடிகர் ஒருவர். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது இதுவே முதல்முறை.
சித்தாந்த அடிப்படையில் திமுக கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டவர்.எஸ்.எஸ். ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பின்னரே இந்திய அரசியலில் இந்தி திரைக்கலைஞர்களை இந்திய தேசிய காங்கிரஸ், தனது கட்சியின் வேட்பாளர்களாக அறிவித்து அவர்களது சினிமா பிரபலத்தை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்டது.
தென் இந்திய அரசியலில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி முதல்வர் ஆனார். அவரை தொடர்ந்து ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தனது மாநில அரசியல்வாதிகள் மத்திய ஆட்சியாளர்களால் அவமதிக்கப்படுவதை எதிர்த்து தெலுங்குதேசம் என்கிற மாநில கட்சியை தொடங்கினார் நடிகர் என்.டி.ராமாராவ். அவர் எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி முதல் அமைச்சர் ஆனார் என்.டி.ராமராவ்.
இவர்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கி வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவினார்கள். இவர்களில் விதிவிலக்காக நடிகர் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சியின் வெற்றிக்கு உதவியதுடன், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார்.
அதே போன்றதொரு சூழல் ஆந்திர மாநில அரசியலில் நடிகர் பவன் கல்யாண் அரசியல் பிரவேசத்தால் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருந்த போது நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி வெற்றி பெற முடியாத சூழலில் காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைத்தார். அரசியல் அவருக்கு சரிபட்டு வராததால் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
ஆனால் அவரது தம்பியும், நட்சத்திர நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கியதுடன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்திர பாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம், பாஜக கூட்டணியை ஆதரித்தார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் – பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மோசமான தோல்வியடைந்தது. பவன் கல்யாண் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் மோசமான தோல்வியை எதிர்கொண்டது. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினரும் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு மாறினார்.
அண்ணன் சிரஞ்சீவி போல கட்சியை கலைக்காமல் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் பயணித்த பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு போல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசின் நெருக்கடிகளை எதிர்கொண்டார்.
2024 சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம், பாஜக கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கொண்டு 21 சட்டமன்ற தொகுதிகளிலும், இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
ஆந்திராவில் உள்ள பிட்டாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாங்க கீதா விஸ்வநாத் போட்டியிட்டார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளார் பவன்கல்யாண்.
இது தொடர்பாக அவரது அண்ணனும், நடிகருமான சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் – ஜனசேனா, பாஜக கூட்டணி பெற்றுள்ள வெற்றி குறித்துவெளியிட்டுள்ள பதிவில், “அன்புக்குரிய கல்யாண் பாபு, ஆந்திரப் பிரதேச மக்களின் மகத்தான மற்றும் அருமையான முடிவால் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் தான் இந்தத் தேர்தலின் உண்மையான கேம் சேஞ்சர். நீங்கள் தான் மேன் ஆஃப் தி மேட்ச்! ஆந்திர மக்கள் மீது நீங்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறை, உங்களின் தொலைநோக்கு பார்வை, மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய உங்கள் விருப்பம், உங்கள் தியாகங்கள், உங்கள் அரசியல் உத்திகள் ஆகியவை இந்த அற்புதமான தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளன. உங்களை கண்டு பெருமையடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களின் நேர்மை, உழைப்பு மற்றும் திறமை மூலம் மாநிலத்தை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று, மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
175 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி தெலுங்குதேசம் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக சட்டமன்றத்தில் இடம்பெறுகிறது.
பவன் கல்யாண் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற முதல் தேர்தலிலேயே ஆந்திர மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகும் வாய்ப்பை இதன் மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
அப்செட்டில் மோடி… ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது?
தேர்தலில் பெரும் பாய்ச்சல் : மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி!