டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு வந்த அழுத்தம்… சௌமியா களமிறங்கிய பின்னணி!
வைஃபை ஆன் செய்ததும் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு பதில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்ற மாற்ற அறிவிப்பு இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்த வாட்ஸப், தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன.
புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில், பாமகவின் வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 22 மாலை அவர் மாற்றப்பட்டு பாமக தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டாக்டர் ராமதாஸின் குடும்பத்திலிருந்து தேர்தல் களம் காணும் அடுத்த நபராக வந்திருக்கிறார் சௌமியா அன்புமணி.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரியில் டாக்டர் அன்புமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணியாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார் அன்புமணி. 2019 தேர்தலில் இதே தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில் வெற்றி பெற்றார். அன்புமணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணியின் மனைவி போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியலில் திடீரென இந்த மாற்றம் செய்யப்பட்டு அன்புமணியின் மனைவி களமிறக்கப்பட்டதன் காரணம் என்ன என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் விசாரித்த போது இதற்கு பாஜகவின் அழுத்தம் தான் அடிப்படை காரணம் என்கிறார்கள்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்த வகையில் எல்லாம் அதிக வாக்குகளை பெற முடியும் என்று வியூகம் வகுத்து அதிலே முதல் கட்டமாக போட்டியிடும் வேட்பாளர்களில் முடிந்தவரை ஸ்டார் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது பாஜக தலைமை.
அந்த வகையில் தான் தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை, கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல். முருகன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் என்று பல்வேறு ஸ்டார் வேட்பாளர்கள் பாஜகவில் களமிறக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல… தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளின் தலைவர்களும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று பாஜக சார்பில் வேண்டுகோள் அழுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் தான் டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன் என கட்சி தலைவர்கள் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கி இருக்கிறார்கள். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியில்தான் தலைமையில் இருந்து யாரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
இதை உணர்ந்த பாஜக அன்புமணியிடம்… ’நமது கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் போட்டியிடுகிறார்கள். அந்த வகையில் பாமகவும் அந்த உத்தியை கடைப்பிடித்தால் நமது அணியின் வாக்கு பலம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் பாமக சார்பில் நீங்களே தர்மபுரியில் போட்டியிடலாமே?’ என்று யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், அன்புமணி தான் ராஜ்யசபா எம்பியாக இருக்கும் நிலையில் மீண்டும் மக்களவைக்கும் போட்டியிடுவது சரியாக இருக்குமா என்று கேட்டுள்ளார். ஆனால், தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் பாஜக தரப்பில். ஆனாலும் தான் போட்டியிடுவதை தவிர்த்து அன்புமணி தனது மனைவி சௌமியாவை தர்மபுரியில் களம் இறக்க தீர்மானித்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
பாஜகவின் அழுத்தத்தால் இந்த வேட்பாளர் மாற்றம் நடந்திருந்தாலும், அதுவும் நன்மைக்கே என்கிறார்கள் தர்மபுரி பாமக நிர்வாகிகள். சௌமியா தர்மபுரி பாமக வேட்பாளராக களமிறங்கியது அந்தத் தொகுதியில் இருக்கும் பாமக நிர்வாகிகளுக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணியை விட சௌமியா மக்களிடம் இறங்கி பேசக் கூடியவர், பழகக் கூடியவர். மேலும், டாக்டர் ராமதாஸின் மருமகள், அன்புமணியின் மனைவி என்ற இமேஜ் அவருக்கு கூடுதல் பலம். எனவே தர்மபுரி தொகுதியில் அன்புமணி போட்டியிடுவதை விட சௌமியா போட்டியிடுவது நல்ல முடிவுதான் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாய்க்கொழுப்பு… எதற்கு நிதியமைச்சர் பதவி?: நிர்மலா சீதாராமனை விளாசிய ஸ்டாலின்
கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை அமலாக்கத்துறை கஸ்டடி!