ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இறையன்புவுக்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் தனி தனி கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 48ஆவது தலைமைச் செயலாளரான இறையன்பு நேற்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். ஓய்வு தொடர்பாக அவர் கூறுகையில்,
“ஓய்வுக்குப் பின் என்ன செய்யலாம் என்று இதுவரை சிந்திக்கவில்லை. இந்த சமுதாயம் என்னை எப்படிப் பயன்படுத்த விரும்புகிறதோ, அதற்கேற்ப செயல்படுவேன். மாணவர்கள், இளைஞர்களின் முன்னேற்றம் குறித்துச் சிந்தித்து வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 1)இறையன்புக்கு ராமதாஸ் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், “தமிழக அரசின் தலைமைச் செயலாளராகச் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இறையன்பு, எந்த அரசு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
அவர் எடுத்திருப்பது மிகவும் சரியான முடிவு. அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் இளைஞர் சமுதாயம் மது, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகிய முப்பெரும் அரக்கர்களிடம் சிக்கிச் சீரழிந்து வருகிறது.
எனவே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் இறையன்பு , மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளிலிருந்து இளைஞர்களைக் காப்பதற்காக அவர் வழியில் பரப்புரை செய்ய வேண்டும்; பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அது அவரை வளர்த்தெடுத்த தமிழ்ச்சமூகத்திற்கு அவர் செய்யும் கைம்மாறாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக உழைத்ததுடன், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் இறையன்பு. அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படுவதற்குக் காரணமாக இருந்தார்.
புவிவெப்ப மயமாதல் என்ற பெருந்தீமை அன்னை பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய மிகப்பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
அன்னை பூமியைக் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதிலும், அதற்கான களப் பணிகளிலும் பசுமைத்தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட இறையன்புவை அழைக்கிறேன்.
அழைப்பை ஏற்று அவர் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிரியா
மின்னம்பலம் செய்தி: உறுதிப்படுத்திய ஓபிஎஸ்
தனுஷ் உட்பட 14 நடிகர்கள் மீது புகார்!