அப்படியொரு தீர்ப்பு வந்தால்… திமுக ஆட்சி போயிடும்… கலவரம் வெடிக்கும் : அன்புமணி எச்சரிக்கை!

Published On:

| By christopher

anbumani warning to mkstalin

தமிழ்நாட்டில் பறவைகள், ஆமைகள், நாய்கள், கால்நடைகளுக்கு கணக்கெடுப்புகள் உள்ளது. ஆனால் சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். anbumani warning to mkstalin

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி ,இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதா தான் காப்பாற்றினார்! anbumani warning to mkstalin

அப்போது மேடையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “இந்தியாவில் முதல்முறையாக 100 சதவீதம் இடஒதுக்கீட்டை அறிவித்தது நீதிக்கட்சி. அது 1917ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. தொடர்ந்து 1937ஆம் ஆண்டு இந்திய அளவிலும் 100 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. ஆனால் விடுதலைக்கு பிறகு அது ரத்து செய்யப்பட்டது. 1950ஆம் ஆண்டு மாநில இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தந்தை பெரியார் எல்லாம் போராடி தான் 41, 50, 69 சதவீத விழுக்காடாக வந்தது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர்தான் 1993 ஆம் ஆண்டு சட்டப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார். அவர் இல்லையென்றால் இன்றும் தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு தான் இருந்திருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்களின் நிலை குறித்தும் அவர்களின் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளவும் அவர்களை முன்னேற்றவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். அதனை நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு எடுக்க மறுக்கிறது.

தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்!

தமிழ்நாட்டில் விரைவாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது.

69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை என்றால் முதலில் திமுக ஆட்சி போயிடும். ஏனென்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடு கலவர பூமியாக மாறும். பீகார், தெலங்கானா அதிகாரம் இல்லாமலா சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது?

தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள், ஆமைகள், நாய்கள், கால்நடைகள், இலவச டிக்கெட்டிற்காக பெண்கள் என கணக்கெடுப்புகள் உள்ளது. இவ்வளவு கணக்கெடுப்பு எடுத்துள்ள தமிழக அரசு, சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்பதில் என்ன தயக்கம்?

தூங்குற மாதிரி நடிக்கிற ஸ்டாலினை நாங்கள் பலமாக தட்டவும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு போராட்டங்களுக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது.

தமிழக அரசு விரைவாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும். நாங்கள் முதற்கட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் அதன் பிறகும் முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்துவோம்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share