தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 19) தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘தமிழ்நாட்டில் போலீஸார் கண்ணியம் குறையாமல் பணியாற்றுவதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு குறித்த காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் நிலைப்பாடு ஆகும்.
ஆனால், போலீஸார்களுக்கு ஏழு ஆண்டுகளில் தொடங்கி 20 ஆண்டுகளுக்குள் மூன்று பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே அரசாணையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றலாம்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதால் சிறிய தொகை மட்டும்தான் அரசுக்கு கூடுதலாக செலவாகும். இதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த சுமையும் ஏற்படாது.
அதே நேரத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால், 1999-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 1,100 பேர், 2002-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 3,000 பேர், 2003-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 11,000 பேர் என 15,000 பேருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைக்கும். கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலானவர்களுக்கு முதல் நிலை காவலராகவும், தலைமைக் காவலராகவும் பதவி உயர்வு கிடைக்கும்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் பதவி உயர்வை எதிர்நோக்கியிருக்கும் காவலர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
மாசக் கடைசியில பட்ஜெட்:அப்டேட் குமாரு
கலையரசன் நடிக்கும் “ஹாட் ஸ்பாட்”: ஸ்பெஷல் என்ன?
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த உதயநிதி
டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் உட்கார்ந்தாரா… உட்கார வைக்கப்பட்டாரா?