சுங்கச் சாவடி கட்டண உயர்வு… மத்திய அரசுக்கு அன்புமணி, டிடிவி கண்டனம்!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர இருப்பதால் மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 26) கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் தனது கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தும்.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 67 சுங்கச் சாவடியில் 36 சுங்கச் சாவடிகளில், ஏப்ரல் மாதம் உயர வேண்டிய சுங்கக் கட்டணம் மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் மாதம் தான் உயர்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்துதான் வருகிற செப்டம்பர் மாதம் 25 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் உயரவுள்ளது.
இதைக் கண்டித்துத் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சாலைகள் பராமரிப்பு இல்லை!
தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை.
சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை.
சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும்!
2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும்; 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், புதிதாக 19 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.
சுங்கக்கட்டணங்களை உயர்த்துவதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட இல்லை. எனவே, செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது அறிக்கையில் ” சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கசாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஸ்டாலின் வெளிநாடு பயணம்… “துரைமுருகனுக்கு இடைக்கால முதல்வர் பதவி” – சீமான் டிமாண்ட்!
யாருக்கு யார் அடிமை? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
ரஜினி தான் என் துரோணாச்சாரியார்… கன்னட நடிகர் உபேந்திரா