ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் மதுபானத்தை தமிழக அரசு பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில் சென்னையில் இன்று (ஏப்ரல் 29) வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,
“தமிழக அரசு வணிக வளாகங்களில் ஏடிஎம் மூலம் மது விற்பனை செய்கிறார்கள். நான் அமைச்சராக இருந்தபோது புகையிலை பொருட்களை ஏடிஎம் மூலமாக விற்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தேன்.
புகையிலை மற்றும் மதுவிற்கான ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் புகையிலை பயன்படுத்தலாம். 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் புகையிலை கொடுக்கலாம் என்று இயந்திரத்திற்குத் தெரியாது.
இதனால் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி புகையிலை ஏடிஎம் இயந்திரத்திற்கு தடை விதித்தோம். இன்றைக்கும் உலக சுகாதார நிறுவனம் புகையிலை மற்றும் மதுபான ஏடிஎம் பயன்படுத்த கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
அதிக தொகைக்கு மது விற்பதால் வணிக வளாகங்களில் மதுபான ஏடிஎம் பயன்படுத்துகிறோம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதிக தொகைக்கு மதுபானம் விற்பனை செய்தால் வணிக வளாக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அதனை தவிர்த்து விட்டு ஏடிஎம் இயந்திரம் பயன்படுத்துவது தான் தீர்வா. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
மதுபான ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். மதுபானத்தை தமிழக அரசு பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
மதுபான ஏடிஎம் இயந்திரத்தை உடனடியாக மூட வேண்டும். திருமண மண்டபங்கள், விளையாட்டு திடல்களில் மது விற்பனை செய்யக்கூடாது. 500 மதுக்கடைகளை மூடப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான பட்டியலை உடனடியாக கொடுக்க வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்தார்.
செல்வம்
Comments are closed.