பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை மூட வலியுறுத்தி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே இன்று (செப்டம்பர் 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்டத்தை என்.எல்.சி பிடியிலிருந்து நாம் அகற்ற வேண்டும். பொதுவாக ஒரு பகுதியில் ஒரு நிறுவனம் தொடங்கினால் அதனை மக்கள் ஆதரிப்பார்கள்.
என்.எல்.சி வந்ததிலிருந்து கடலூர் மாவட்ட மக்கள் அதனை எதிர்த்து வருகின்றனர். 1956-இல் ஒரு சில லட்சங்களில் தொடங்கப்பட்டது என்.எல்.சி நிறுவனம்.
என்.எல்.சி நிறுவனத்தால் நாம் நம்முடைய வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இந்த நிறுவனம் தொடங்கியதால் 44 கிராமங்கள் அடியோடு அழிந்தது.
37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார்கள். 66 ஆண்டுகளாக என்.எல்.சி நிறுவனம் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.
என்.எல்.சி நிறுவனத்தால் மக்களுக்கு வளர்ச்சி இல்லை. ஆண்டுதோறும் 11, 500 கோடி வருவாய் ஈட்டுகிறது என்.எல்.சி நிறுவனம். அதில் லாபம் மட்டும் 2,400 கோடி ரூபாய்.
ஆனால் கடலூர் மக்களுக்கு என்.எல்.சி நிறுவனம் எதையும் செய்யவில்லை. கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர், தற்போது 1000 அடிக்கு சென்று விட்டது.
இதற்குக் காரணம் என்.எல்.சி துரோகி தான். தனது வருமானத்தை, வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது என்.எல்.சி நிறுவனம்.
இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள் தேர்தலுக்கு முன்பு என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பேசினார்கள். தற்போது என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
ராணுவமே வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். இனி யாராவது உங்கள் பகுதியில் நிலம் எடுக்க வந்தால் அனுமதிக்காதீர்கள். என்.எல்.சி ஒரு பிடி மண்ணைக்கூட இனி எடுக்க முடியாது.” என்று ஆவேசமாக பேசினார் அன்புமணி ராமதாஸ்.
செல்வம்
தமிழர்களின் உழைப்பில் செழிக்கும் என்எல்சி நிறுவனம் தேவையில்லை: அன்புமணி ராமதாஸ்