சேலம் தொகுதியில் நம் வாக்குகளும், நம் உழைப்பும் எங்கே போச்சு? என்று கட்சி கூட்டத்தில் பாமக நிர்வாகிகளை நேரடியாக கடிந்துகொண்டார் அன்புமணி ராமதாஸ்.
சேலம் மாவட்டத்தில் பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்பு என்ற பெயரில் அக்கட்சியின் கூட்டம் இன்று (ஜனவரி 28) நடைபெற்றது. இதில் பாமக நிறுவுனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்று அய்யா குதிக்க சொன்னால் குதிச்சிருவோம்!
அப்போது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அன்புமணி பேசுகையில், “இதே மாவட்டத்தில் அன்று தனியாக நின்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் 2 தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம். அப்படி என்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா, இது வளர்ச்சியா என்ற கேள்விகள் எனக்குள் எழுகிறது.
நமக்கு பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட ராமதாஸ் இருக்கிறார். ஆனால் அன்றைக்கு இருந்த உழைப்பு இன்று நம்மிடம் இல்லை. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
அன்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி, களத்தில் இறங்கி வேலை செய்தோம். அய்யா குதிக்க சொன்னால் குதிச்சிருவோம். இன்று கையில் செல்போன் வைத்துக்கொண்டு, கட்சியின் ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள் கூட கிராமங்களுக்கு செல்வது கிடையாது.
தமிழ்நாட்டில் யாரைக் கேட்டாலும் பாமக சிறந்த கட்சி என்று சொல்வார்கள். நல்ல கொள்கை, கோட்பாடு, தொலைநோக்குப் பார்வை உள்ள கட்சி, தினம் அறிக்கை என்று சொல்வார்கள். ஆனால், இந்த செய்திகளை களத்தில் கொண்டு போய் யாருமே சேர்ப்பது இல்லை.
வெறி வர்ற மாதிரி தெரியலயே..
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு பெரிய வருத்தம்? சேலம் மக்களவை தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 4 தொகுதிகளில் நாம் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நமக்கு கிடைத்தது சொற்ப வாக்குகள். சரி, திமுக 500 ரூபாய், அதிமுக 500 ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் நம் வாக்குகள், நம் உழைப்பு எங்கே போச்சு?
நாம் இழந்த வாக்குகளை எல்லாம் மீண்டும் வர வைக்க வேண்டும். அது தான் உங்கள் கடமை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. வெறியுடன் களத்தில் இறங்குகள். நம்மைப் போல யாராலும் உழைக்க முடியாது, ஆனால் ஏதோ ஒரு தொய்வு இருக்கிறது.
நம் கட்சியின் மிகப்பெரிய சொத்து, என் தம்பிகளும், தங்கைகளும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்றக் கூடியவர்கள். அவர்களுக்குள் வெறி இருக்கிறது. மனதுக்குள் இருக்கும் வெறியை இன்னும் 10 மாதங்களில் பார்க்க வேண்டும். ஒரு சிலர் கூட்டணி கூட்டணி என்கிறார்கள். நாம் தனியாகப் போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அளவுக்கு நாம் உழைக்க வேண்டும்.
பாமகவுக்கு அதிக எம்.எல்.ஏக்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம் மாவட்டம். எவ்வளவோ செய்திகளை மக்களிடம் சொல்லலாம்.. என்ன அண்ணாமலை அப்படியே பாக்குற.. உன்னையும் தான் சேர்த்துச் சொல்றேன்.. உன் தொகுதியில் வாங்குனியே ஓட்டு.. அது 52 ஆயிரம் வாக்குகள் வாங்கிய தொகுதி தெரியுமா? இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றன. வெறி வரவேண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு களத்தில் இறங்குங்க.. வெறி வருமா? என்ன.. உன் மூஞ்சிய பார்த்தா வெறி வர்ற மாதிரி தெரியலயே.. இரண்டில் ஒன்றை பார்த்து விடலாம்.. என்ன ராமகிருஷ்ணா.. கோபம் வந்துடுச்சா?”என ஆவேசமாக பேசினார் அன்புமணி.