நெய்வேலி என். எல். சி நிறுவனத்தை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளநிலையில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
என். எல். சி நிறுவனம் அதன் முதல் சுரங்க விரிவாக்கத்திற்காக 9 கிராமங்களில் 3000 க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களையும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்த உள்ளது.
இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
என். எல். சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.
ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என். எல். சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிக்கிறது.
கடந்த காலங்களில் நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடும் கொடுக்காமல், வேலையும் வழங்காத என். எல். சி இப்போதும் நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்போவதில்லை. என். எல். சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

என். எல். சி நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு என்.எல்.சி தனியார்மயமாக்கப்பட்டால், தனியார் நிறுவனத்தால் நிலங்களை கையகப்படுத்த முடியாது.
அதனால், தனியார்மயமாக்குவதற்கு முன்பாகவே 25,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அதையும் சேர்த்து தனியாருக்கு விற்க என். எல். சி திட்டமிட்டிருப்பதாகக் கூறி,
இந்த முயற்சியை கைவிடக்கோரியும், என். எல். சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்றும், நாளையும் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார்.
வானதிராயபுரத்தில் தொடங்கி தென்குத்து, கங்கைகொண்டான், வடக்குவெள்ளூர், அம்மேரி, தொப்பிலிகுப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி கரிவெட்டி வரை அவர் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நடைபயணம் மேற்கொள்ளும் இடங்களில் ஆங்காங்கே மேடை அமைத்து அன்புமணி ராமதாஸ் பேசவும் இருக்கிறார். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக நெய்வேலியில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்தி கணேசன், உள்பட 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலை.ரா
ஹர்திக் பாண்டியா கேப்டன்சியும் , தொடரும் கமெண்ட்ஸ்களும்!
தொடர்ந்து ஏறும் தங்கம் வெள்ளி விலை: கலக்கத்தில் பெண்கள்!