தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி சிறுமி விஷ்ணுபிரியாவின் ஆன்மா அமைதியடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய ஆசை அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்பொழுது காண்பேனோ…அப்பொழுது தான் என் ஆன்மா சாந்தி அடையும்…போயிட்டு வரேன்….”
குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் உள்ள குடும்பங்கள் தினமும் அல்லல்படும் நிகழ்வுகளை இரண்டு வரி கடிதத்தில் எழுதிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார் வேலுரை சேர்ந்த விஷ்ணுபிரியா. அவரது மரணம் தமிழகத்தில் இன்று மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சின்ன ராஜாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு பிரகாஷ் (வயது 17) என்ற மகனும் விஷ்ணுபிரியா (வயது 16) என்ற மகளும் உள்ளனர். மனைவி கற்பகத்திடம் பிரபு தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு விஷ்ணுபிரியா பலமுறை தனது தந்தையிடம் சண்டையிட்டுள்ளார். தந்தையின் குடிப்பழக்கத்தால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை வந்ததால் மனமுடைந்த விஷ்ணுபிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஷ்ணுப்பிரியாவின் கடிதம் எனது இதயத்தை வாட்டுகிறது. விஷ்ணுப்பிரியாவின் வேண்டுதல் அவருடையது மட்டுமல்ல…. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்வயது குழந்தைகளின் மனநிலை இது தான்.
தமிழ்நாட்டிலுள்ள 90 விழுக்காடு குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் அமைதி இல்லை. வறுமை… சண்டை…. பசி…. பட்டினி… நோய், மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவை தான் அந்தக் குடும்பங்களை வாட்டுகின்றன. அதன் விளைவு தான் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் விருப்பமும் மதுவிலக்கு தான். அதை நிறைவேற்ற உதவும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்…. மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்…. வேலூர் சிறுமி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா அமைதியடைய உதவுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியா
“சிவாஜி கன்னத்தை கிள்ளிய கலைஞர்” – கனிமொழி நெகிழ்ச்சி!