விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, நாம் தமிழர் கட்சிகள் களத்தில் உள்ளனர்.
இந்தநிலையில், விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 30) வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. திமுகவினரின் சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்ட பா.ம.க. மற்றும் அதிமுகவினர் மீது ஆளும் திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திமுகவின் அத்துமீறல்களை தடுக்க வேண்டிய காவல்துறையும், தேர்தல் அதிகாரியும் அவர்களுக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுகவின் 9 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணையாக மற்ற அமைச்சர்களும், 80க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர்.
தேர்தல் விதிகளை மீறும் திமுக!
அவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான மகிழுந்துகளில் தொகுதியை வலம் வருகின்றனர். இது அப்பட்டமான விதிமீறல் என்பதால், அந்த மகிழுந்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், அதை செய்யாமல் அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டக் காவல்துறையும், அதிகாரிகளும் பாதுகாப்பு அளித்துக் கொண்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் கோயில் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து திமுகவினர் கூடாரங்கள் அமைத்துள்ளனர். அங்கு திமுகவினர் பெருமளவில் கூடி மது அருந்தி, சீட்டு விளையாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சட்டவிரோதமான இத்தகைய கட்டமைப்புகளை அகற்ற வேண்டுமென அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய கூடாரம் அமைப்பதற்காக ஆசூர் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் கண்ணதாசன் என்பவர் சட்டவிரோதமாக மணல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்த அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளர் கந்தன் என்பவரை கண்ணதாசன் கொடிய ஆயுதங்களால் தாக்கியுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைத் தலைவர் அண்ணாதுரையும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திமுக கிளைச் செயலாளர் கண்ணதாசன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவற்றை விற்பனை செய்து வருபவர் என்றும், பல வழக்குகளில் அவர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இப்போது பா.ம.க. மற்றும் திமுக நிர்வாகிகளை தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு பதிலாக மருத்துவமனையில் சேர்த்து திமுகவினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தேர்தல் அதிகாரியும் இதை வேடிக்கை பார்க்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் காலமான 15000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களின் ஒட்டுகளை கள்ளவாக்குகளாக போட திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் வாக்குகளை நீக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் பலமுறை புகார் அளித்தும் அதன் மீது தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை.
இவை அனைத்துக்கும் உச்சமாக தேர்தல் அதிகாரி சந்திரசேகர் கடந்த சில நாட்களாக தேர்தல் அலுவலகத்துக்கு வருவதே இல்லை. கோட்டாட்சியர் நிலையிலான அவரால் திமுக அமைச்சர்களின் அழுத்தங்களையும், மிரட்டல்களையும் மீறி நேர்மையான முறையில் பணியாற்ற முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்தே திமுகவின் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்ட தேர்தல் அதிகாரி சந்திரசேகரால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது என்பது உறுதியாகி விட்டது.
வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்!
தேர்தல் பார்வையாளர் விக்கிரவாண்டியில் இல்லாமல் விழுப்புரத்தில் தங்கியுள்ளார். அவரும் திமுக மீதான புகார்களை கண்டுகொள்வது கிடையாது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓரளவாவது நியாயமாக நடைபெற வேண்டும் என்றால், தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வராத வெளிமாநில கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் தான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும்.
எனவே, தேர்தல் அதிகாரி சந்திரசேகரை அந்தப் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். அவருக்கு பதிலாக வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்களை தடுப்பதற்காக ஒன்றியத்திற்கு இரு பார்வையாளர்கள், விக்கிரவாண்டி பேரூருக்கு ஒரு பார்வையாளர் என மொத்தம் 5 பார்வையாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.
திமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து இதுவரை பா.ம.க. சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடலூர் அதிமுக நிர்வாகி கொலை: எடப்பாடி கண்டனம்!
மூன்றே நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய கல்கி!