ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான இறகுப் பந்து போட்டி மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் நடத்தப்படுகிறது.
கடந்த 17ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. நேற்று (செப்டம்பர் 20) நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடைப்பயணம் என்றாலே மாற்றம் வரும். உதாரணமாகத் தருமபுரியில் நான் 3 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டேன்.
தருமபுரி காவேரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கொண்ட பயணத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் வரவேற்பு கொடுத்தனர்.
எனவே இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதில் நிச்சயம் மாற்றம் வரும்” என்று கூறியுள்ளார்.
தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி அன்புமணி ராமதாஸ், ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த நடைப்பயணம் நிறைவு பெற்றது. அப்போது பாமகவினர் மட்டுமின்றி அவருக்கு அப்பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ராகுல் காந்தியுடன் இணைந்த சச்சின் பைலட்
சமாதானப்படுத்தாத ஸ்டாலின்: சண்டையிட்டு கிளம்பிய சுப்புலட்சுமி: 23 நாட்கள் நடந்தது என்ன?