பாமக ஜனநாயக கட்சி என்பதால், பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிசம்பர் 29) தெரிவித்தார்.
பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று (டிசம்பர் 28) புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிப்பது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மேடையில் மோதல் வெடித்தது.
இந்தநிலையில், தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் ராமதாஸை அன்புமணி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பாமக பொருளாளர் திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுடன் இன்று கட்சியின் வளர்ச்சி, வருகின்ற சட்டமன்ற தேர்தல், சித்திரை முழு நிலவு மாநாடு, சாதி வாரி கணக்கெடுப்பு, அடுத்தக்கட்ட போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து குழுவாக விவாதித்தோம்.
வருகின்ற ஆண்டு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அடுக்கடுக்கான போராட்டங்கள், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த செயல்திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்தோம்” என்றார்.
தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அன்புமணி, “பாமக ஒரு ஜனநாயக கட்சி. பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் அனைத்து கட்சியிலும் நடப்பது சகஜம். எங்களுக்கு ஐயா ஐயா தான். இன்றைக்கு அவரை சந்தித்து பேசினோம். அதுதான் ஜனநாயக கட்சி” என்றார்.
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனை குறித்து நீங்கள் பேச தேவையில்லை. நாங்கள் பேசிக்கொள்வோம்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொதுக்குழு கூட்டத்தில் மோதல்… ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு!
மலையாள சினிமாவிற்கு 700 கோடி லாஸ் – கொதிக்கும் தயாரிப்பாளர்கள்!