தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செப்டம்பர் 8) தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நாங்கள் வலியுறுத்துவது சென்செஸ் கிடையாது, சர்வே எடுக்க வேண்டும். பிகார், ஆந்திரா மாநிலங்களில் முழுமையாக சர்வே எடுக்கப்பட்டு விட்டது. கர்நாடகா, தெலங்கானா, ஒரிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சர்வே எடுத்து வருகிறார்கள்.
பஞ்சாயத்து தலைவருக்கும் சர்வே எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படி என்றால் ஸ்டாலினுக்கு அதிகாரம் இருக்காதா? சர்வே எடுப்பதில் ஸ்டாலினுக்கு என்ன பயம்? எனவே, ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பியதும் சர்வே எடுக்க வேண்டும்.
சர்வே எடுக்கவில்லை என்றால், ஸ்டாலினுக்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை. திமுக அரசுக்கு உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் சர்வே எடுக்க வேண்டும். இது வன்னியர் பிரச்சனை மட்டும் இல்லை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இதில் பிரச்சனை இருக்கிறது.
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட இதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு என்றைக்கு வேண்டுமானாலும் விசாரணைக்கு வரும். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், நிச்சயமாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை, உச்சநீதிமன்றம் ரத்து செய்து விடும்.
அன்றைக்கே திமுக ஆட்சி உறுதியாக கலைந்து விடும். ஏனென்றால் தமிழகம் முழுவதும் மிகவும் பதட்டமான சூழல் உருவாகும். இட ஒதுக்கீடு என்பது சாதரணமான விஷயம் கிடையாது. 50 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் விளைவாக 69 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தது.
69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 69 சதவிகிதத்திற்கு மேல், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபித்தால் தான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நிலைநாட்ட முடியும்.
69 சதவிகித இட ஒதுக்கீடு மீது கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இது திமுக அரசுக்கு தெரியும். வேண்டுமென்றே அவர்கள் சர்வே எடுக்காமல் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் நான் இதை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அவர்கள் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திண்டுக்கல்லில் பயங்கரம்… 17 வயது சிறுமியை ஏர் கன்னால் சுட்ட காதலன்!
‘விடாமுயற்சி’ ரிலீஸ்: மகிழ்திருமேனி டிமாண்ட்… முரண்டு பிடிக்கும் லைகா!