நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.சென்டரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இன்று(ஜூன் 17) பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.
இதனிடையே, நேற்று (ஜூன் 16 ) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ என்ற பாடலின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது.
அதில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் இடம் பெறும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்”,என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர்.
அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது.
எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்”. என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தளபதியைப் பார்க்க வெயிட்டிங்: சந்தோசத்தில் மாணவிகள்!
“மோடி அமித்ஷா இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” – ஆ.ராசா