மதுவிலக்கு – ஒரே உத்தரவு தான்… இல்லையென்றால் பதவி விலகுங்கள்: அன்புமணி காட்டம்!

அரசியல்

மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி இன்று (ஜூன் 29) வரை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிரொலித்தது. இதுகுறித்து பேச அனுமதிக்காததால், அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

அப்போது அவர், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

அதுபோன்று சட்டப்பேரவையில் பேசிய அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், “உழைப்பவர்களின் அசதியை போக்குவதற்காக மது தேவைப்படுகிறது. அரசு விற்கும் மதுவை சாஃப்ட் ட்ரிங்க்காக நினைக்கிறார்கள். அதில் கிக் இல்லை என்பதால் கள்ளச்சாராயத்தைத் தேடி செல்கின்றனர். மனிதனாய் பார்த்து திருந்த வேண்டும். தெருவுக்குத் தெரு காவல் நிலையம் அமைக்க முடியாது.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி எனச் சுற்றி இருக்கும் மாநிலங்களில் மதுவிற்கும் போது தமிழ்நாட்டை மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்?” என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதிவு விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.

அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது.

இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.

அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது.

அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல்.

எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

உடுமலையில் கள்ளச்சாராய மரணமா? திருப்பூர் போலீஸ் மறுப்பு!

ஜூன் 29: தேசிய புள்ளியியல் தினம்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “மதுவிலக்கு – ஒரே உத்தரவு தான்… இல்லையென்றால் பதவி விலகுங்கள்: அன்புமணி காட்டம்!

  1. பல ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்ல சில மாதங்கள் முன்னெ கள்ளசாராயம் குடிச்சு அம்பது பேருக்கு மேல செத்தாங்களே, அவங்களையும் பதவி விலக சொல்வீங்களா சார்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *