விவசாய நிலத்தில் இனி ஒரு வண்டி இறங்கினாலும் மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் கதிர்வந்த நெற்பயிர்களை அழித்து ஜே.சி.பி வாகனங்கள் மூலம் என்.எல்.சி நிறுவனம் கால்வாய் அமைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இன்று (ஜூலை 28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு என்.எல்.சி மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,
“மண்ணையும் மக்களையும் அழித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு அரசையும் மத்திய அரசையும் கடுமையாக கண்டிக்கின்றோம். இனி நிலத்தை எடுக்கின்ற வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள்.
என்.எல்.சி தமிழ்நாட்டின் வளர்ச்சி கிடையாது. இந்த மாவட்டத்தை அழிக்கின்ற என்.எல்.சி தேவையில்லை. விவசாய நிலத்திற்கு 5 கோடி கொடுத்தாலும் என்.எல்.சி எங்களுக்கு தேவையில்லை, வெளியேறு.
இந்த மண்ணை காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் போராடி கொண்டிருக்கின்றோம். இந்நேரம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து உழவர் சங்கமும் இங்கு வந்திருக்க வேண்டும். கதிர் வந்த நெல்லை நாசப்படுத்திய பிறகும் இன்னும் வரவில்லை. கதிர் வரும் நெல்லை அழிப்பது, தாயின் வயிற்றில் இருக்கும் கருவை அழிப்பதற்கு சமம்.
நேற்று திருச்சியில் விவசாய சங்கமம் நடத்துகிறார்கள். ஆனால் இதெல்லாம் நடத்தி என்ன பிரயோஜனம் இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தின் உரிமையாளர்களுக்கு விலையை உயர்த்தி கொடுங்கள் என்று போராடினோம். அன்று தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இல்லை.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருக்கிறது. எனவே இன்றைக்கு என். எல். சியின் தேவை இல்லை.
நான் வருகிறேன் என்பதால் இன்றைக்கு என். எல். சி கால்வாய் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் போதாது. நாளை மீண்டும் வேலையை தொடங்கினார்கள் என்றால் ஒட்டு மொத்த மாவட்டத்திலும் சாலை மறியல் நடக்கவேண்டும்.
ஒரு நாள் அடையாளத்திற்காக மட்டும் சாலை மறியல் செய்யக்கூடாது. விவசாய நிலத்தில் இனி ஒரு வண்டி இறங்கினாலும், தொடர்ந்து சாலை மறியல் செய்ய வேண்டும்.
இந்த போராட்டம் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டுமல்ல, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை அரியலூரிலும் நடக்கும்” என்று கூறினார் அன்புமணி ராமதாஸ்.
மோனிஷா
ஒரே இரவில் கோடீஸ்வரர்களான கேரளாவின் 11 தூய்மை பணியாளர்கள்!
ராமேஸ்வரம் வரும் அமித்ஷா: அதிரடி உத்தரவிட்ட மின் வாரியம்!