“என்.எல்.சி மூன்றாம் சுரங்கம் அமைத்தால் கடலூர் முழு பாலைவனமாகும்” – அன்புமணி

Published On:

| By Selvam

கடலூர் மாவட்டத்தில் என்.எல்..சி மூன்றாம் சுரங்கம் அமைப்பதால் 26 கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி நிறுவனம் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் பாமகவை சேர்ந்த 197 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாம் சுரங்கம் அமைப்பதால் கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு மின்சாரம் தருவதாகக் கூறி 1956-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் நுழைந்த என்.எல்.சி நிறுவனம், இப்போது அடுத்தகட்டமாக ரூ.3755.71 கோடியில், 26 கிராமங்களில், 12,125 ஏக்கரில் மூன்றாவது சுரங்கத்தை (NLC Mines -III) அமைக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

நெய்வேலியில் கடந்த 21.07.2022-ஆம் நாள் நடைபெற்ற என்.எல்.சி இயக்குனர்கள் கூட்டத்தில் மூன்றாம் சுரங்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கத்திலிருந்து ஆண்டுக்கு 11.50 மில்லியன் டன் நிலக்கரி தோண்டி எடுக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது சுரங்கத் திட்டத்தால் அது செயல்படுத்தப்படவுள்ள 26 கிராமங்களில் உள்ள 14,061 குடும்பங்களைச் சேர்ந்த 54,315 பேர் வாழ்வாதாரம் இழந்து, வெளியேற்றப்படுவார்கள்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் 26 கிராமங்களில் 9 கிராமங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்றன. மீதமுள்ள கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியில் அமைந்திருப்பவை. இப்பகுதியில் சுரங்கம் அமைப்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்திற்கு எதிரானது.

என்.எல்.சி மூன்றாவது சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுமா? என்று நாடாளுமன்றத்தில் 31.07.2023 அன்று நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதிலளித்த மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தமிழக அரசிடமிருந்து அது தொடர்பாக எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 05.04.2023-ஆம் நாள் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் எந்த புதிய நிலக்கரி சுரங்கமும் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் (Assurance) அளித்திருந்தார். ஆனால், அந்த உத்தரவாதத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக இல்லை.

என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு தயாராக இல்லை. மாறாக கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்.எல்.சி முயற்சிக்கு துணையாக நிற்கிறது.

எடுக்கப்படும் கிராமங்கள் சின்ன நற்குணம், கோ. ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு 26 கிராமங்களில் நிலம் எடுக்கப்படும்.

என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 12,125 ஏக்கர் நிலங்களும் பொன் விளையும் பூமி. நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், மலர் வகைகள் உள்ளிட்ட அனைத்தும் விளையும் அளவுக்கு வளமானது இந்த நிலம் ஆகும்.

என்.எல்.சி சுரங்கத்தை ஒட்டியுள்ள 31 இடங்களில் பூவுலகின் நண்பர்கள், மந்தன் அத்யயன் கேந்திரா ஆகிய தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் 17 இடங்களில் நிலத்தடி நீரின் தரம் மிக கடுமையாகவும், 11 இடங்களில் மோசமாகவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம், தோல், மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விட இது மிக மோசமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலத்தடி நீர்மட்டம் 8 அடியிலிருந்து 800 அடிக்கும் கீழ் சென்று விட்டது, நச்சு வாயுக்களால் மக்களுக்கு பல வகையான நோய்கள் என ஏற்கனவே பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தைத் தொடர்ந்து மேலும் 2 நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்த என்.எல்.சி திட்டமிட்டிருக்கிறது. வீராணம் மற்றும் பாளையங்கோட்டை நிலக்கரித் திட்டங்கள் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் வட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45,000 ஏக்கரில் செயல்படுத்தப் படவுள்ளன. இதற்கான ஆய்வுகளை மத்திய அரசின் தாது கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MINERAL EXPLORATION AND CONSULTANCY LTD) நடத்தியுள்ளது.

ஏற்கனவே 37,000 ஏக்கரில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டதற்கே கடலூர் மாவட்டம் பாதி பாலைவனமாகி விட்டது. கூடுதலாக 70,000 ஏக்கரில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் கடலூர் முழு பாலைவனமாக மாறுவதை தடுக்கவே முடியாது.

மின்சாரம் தயாரிக்க காற்று, சூரிய ஒளி, நீர், கடல் அலைகள், திடக்கழிவுகள் என பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால், உணவுக்கான ஆதாரம் நிலம் மட்டும் தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மண் தான் நமக்கு உணவளித்தது. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நமது தலைமுறையினருக்கு உணவளிக்க இந்த நிலங்களை நாம் பாதுகாத்து விட்டுச் செல்வோம்.

அதற்காக உழவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகிய நாம் அனைவரும் மண்ணையும், மக்களையும் காக்க நிலக்கரி சுரங்கங்கள் என்ற பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக விழித்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

மோடியின் தமிழ் விளம்பரத்தில் ‘கன்னட’ வீடு வந்தது எப்படி?

சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஸ்வீட் சாப்பிட நினைப்பவரா நீங்கள்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share