அன்புமணி – முகுந்தன்: இணைந்து கொண்டாடிய பொங்கல்!

Published On:

| By Selvam

அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை இன்று (ஜனவரி 14) கோலாகலமாக கொண்டாடினர்.

அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் இன்று தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில், பாமக தலைவர் அன்புமணியும் இளைஞரணி தலைவர் முகுந்தனும் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததும், மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ராமதாஸ், “இது என் கட்சி. நான் சொல்வது தான் இங்கே நடக்கும். யாருக்கு பிடிக்கவில்லையோ வெளியே போ” என்றார்.

பாமக பொதுக்குழுவில் நடந்த இந்த மோதல் அக்கட்சியினர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பொதுக்குழு கூட்டத்தில் மோதல் வெடித்தபிறகு, அன்றைய தினமே தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற டாக்டர் ராமதாஸின் மூத்த மகளும் முகுந்தனின் தாயாருமான ஸ்ரீகாந்தியும், தந்தை டாக்டர் பரசுராமனும் தங்களது மகனுக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று கூறினர்.

அடுத்த நாள் டிசம்பர் 29-ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அன்புமணி சென்று சந்தித்தார்.

அப்போது டாக்டர் ராமதாஸ், “இளைஞரணி பதவியைக் கொடுத்தால் அது முகுந்தனுக்குத்தான். அதுவரை இளைஞரணித் தலைவர் பதவி காலியாகவே இருக்கட்டும்’ என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதையடுத்து அன்புமணி இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமக இளைஞரணி தலைவராக தான் அறிவித்தபடி முகுந்தன் நீடிக்கிறார்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர்களை அன்புமணி சந்தித்து வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடுவார். இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தில், அன்புமணி கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு பாமக நிர்வாகிகள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்தது.

இந்தநிலையில், தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அன்புமணியும் முகுந்தனும் ஒருவொருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தைலாபுரம் தோட்டத்தில் இன்று அன்புமணி, முகுந்தன் இடையே நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட சந்திப்பானது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

செல்வம்

தை மாத நட்சத்திர பலன்கள்: மகம்

அண்ணா பல்கலையைத் தொடர்ந்து புதுச்சேரி பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share