சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்.
தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகில் உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை.
அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது.
இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும்.
கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இந்த சம்பவத்தை கண்டித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புகுந்த வட மாநில நபர் ஒருவர் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் மீது மேற்கொள்ளப்படும் இது போன்ற தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை கைது செய்வதோடு அவர்களுக்கு விசாரணை காலத்தில் ஜாமீன் வழங்காமல் வழக்கை நடத்தி தண்டனை பெற்றுத்தர அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுக்கடங்காமல் கணக்கு வழக்கின்றி தமிழ்நாட்டில் வந்து குவியும் வட இந்திய போதை கும்பல்களால் தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதும் பெரும் கவலையளிக்கிறது, தமிழகத்தில் அதிகரித்து வரும் வட இந்தியர் குடியேற்ற பிரச்சினையை அரசு தீவிரமாக அணுகி உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி அவர்கள் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, வேதனை அளிக்கக் கூடியது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள்.
நோயாளியின் உறவினர்கள், தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம்.
ஆனால் அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது. மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்.
ஆனால், மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது வேதனை. மருத்துவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்.
அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜார்க்கண்ட் தேர்தல் : 11 மணி நிலவரம்!
‘எப்போ பார்த்தாலும் உறங்கிட்டே இருக்குது’- எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவருக்கு நஷ்ட ஈடு 2.59 லட்சம்