2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாமக தலைமை தற்போதே தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படு தோல்வியடைந்தது. பாமக கோட்டையாகக் கருதிய தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்தது கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எனவே, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும், அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களாக வட மாவட்டங்கள் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அன்புமணி ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி அம்மாவட்ட நிர்வாகிகளோடு தனிப்பட்ட முறையிலும் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி என்று செய்தியாளர்களிடம் பேசினார் அன்புமணி.
இந்த பயணத்தின் இடையிலேயே இன்னொரு முக்கியமான வேலையையும் அன்புமணி செய்து வந்தார். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை ஆய்வு செய்து, கடலூர் நாடாளுமன்றத் தொகுதியை மாதிரி தொகுதியாகத் தேர்வு செய்துள்ளார் அன்புமணி. அந்த தொகுதிக்கு நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ.க்களிடம் விசாரித்தோம்.
“கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் அல்லது எம்எல்ஏ, தலைமையில் 15 நிர்வாகிகள் என மொத்தம் 75 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் ஜெயராமன், மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், அரியலூர் செந்தில், பழனிசாமி, ஆலயமணி உள்ளிட்ட 15 தலைமை நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் சில ஆலோசனைகளைக் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் ஜூம் மீட்டிங் நடத்தினர். அப்போது நிர்வாகிகளுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கிய அவர், அசைன்மென்ட்டும் கொடுத்துள்ளார்.
அதாவது, அனைத்து கிராமங்களிலும் கட்டாயம் கிளைகள் அமைக்க வேண்டும்.
அதேபோல் பூத் கமிட்டியில் 10 பேர் இடம் பெற வேண்டும். அவற்றில் இரண்டு பெண்கள் கட்டாயம் இருக்க வேண்டும், அவர்களின் செல்போன் எண், வாட்ஸ் அப் எண் ஆகியவை செயல்பாட்டில் இருக்க வேண்டும்,
குறிப்பாகத் தலித் பகுதியில் கிளை அமைத்து, அங்குள்ளவர்களை பூத் கமிட்டியில் உறுப்பினர்களாகவும் சேர்க்க வேண்டும். கிராமங்களுக்குச் செல்லும்போது ஆரவாரம் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் பணிகளைக் கவனிக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு கூடுதலாக ஒன்பது தொகுதிகளில் இதே வேலையைச் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கடலூர், விழுப்புரம், தருமபுரி, சேலம், வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிரமான வேலைகளில் இறங்கியுள்ளது பாமக தலைமை” என்கிறார்கள்.
வணங்காமுடி
ஒவ்வொரு தொகுதியிலும் மைதானம் அமைக்கப்படும்: உதயநிதி உறுதி!
’பிச்சைக்காரன் 2 ’க்கு கிடைத்த ரூ.20 கோடி