தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாடசாலை அமைப்பது நல்ல விஷயம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை நங்கநல்லூர் நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாளை (ஜூலை 15) மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது,”ஜூலை 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொள்ள வேண்டும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் இடைநின்ற மாணவர்கள் உயர்கல்வி வழிகாட்டுதல் பெறுவதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு முதல்வர் கையெழுத்திட்ட கடிதம் சென்றடைந்திருக்கும். பள்ளி மேலாண்மை கூட்டத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் பெற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் இரவு பாட சாலை திட்டத்தை துவங்க தளபதி மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ், “மாணவர்களுக்காக விஜய் நல்ல விஷயம் செய்கிறார். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கமும் அது தான். கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக மாலை வேளைகளில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
செல்வம்
சடங்குகளில் ஏதும் அர்த்தம் உள்ளதா?