அதிமுக ஆட்சி காலத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசுப் பள்ளிகளில் 2016 – 2021 அதிமுக ஆட்சிகாலத்தில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து. குறிப்பாக மூன்று சதவீதம் பேர் தனியார் பள்ளிகளை நோக்கி சென்றிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதற்கு நாங்கள் எதிராக செயல்படவில்லை. அதே நேரம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயரவேண்டியது அவசியம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கக்கூடிய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் சீரிய முயற்சியின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வந்திருக்கிறார்கள். எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியும், எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தற்போதைய ஆட்சியும் உதாரணம்.
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் பல வீண் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
திமுக அரசு அமைந்த பின்னர், புத்தகப்பையில் அச்சிடப்படும் முதலமைச்சரின் புகைப்படத்துக்காக 13 கோடி ரூபாய் செலவு ஆகும் என சொன்ன போது, ஏற்கனவே அச்சிடப்பட்ட முன்னாள் முதலமைச்சரின் புகைப்படமே இருக்கட்டும் என சொன்னவர் நமது முதலமைச்சர்.
இங்கு வேதனையுடன் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், 2016 – 2021 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 5 லட்சத்துக்கும் மேல் வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், 2.8 லட்சம் வீடுகள் தான் கட்டி இருக்கிறார்கள்.
இந்த திட்டம் எந்த அளவுக்கு செயல்பட்டது என்பது குறித்து எந்த விபரமும் இல்லை. திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய 1,515 கோடி ரூபாய் வராமல் போய்விட்டது.
இதில் தேவையற்ற வகையில் 2.18 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள் என்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு முறையாக வழங்க வேண்டிய வீடுகள் வழங்கப்படவில்லை. அந்த சமுதாய மக்கள், அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காக, இதை சொல்கிறேன்.
நாகை மாவட்டத்தில் கொற்கை ஒன்றியத்தில் அம்மாசி என்ற பட்டியலின பயனாளி வீடு பெற தகுதியான நிலையில் இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கு வழங்க வேண்டிய வீட்டை, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த செந்தில் குமாருக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மிகவும் அலட்சியமாக, கடந்த ஆட்சியில் செயல்பட்டு இருக்கிறார்கள். 50 கோடி ரூபாய்க்கும் மேலாக முறைகேடாக செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடு தொடர்பாக ஆறு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
திமுக அரசு வந்தவுடன் இந்த திட்டத்திற்காக நாம் 2,492 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து நாம் பெற்றிருக்கிறோம். கடந்த ஆட்சியில் தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இந்த அரசு செயல்படுகிறது.
இதே போல, பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்தது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில், 7500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலில் 1400 கோடி ரூபாயும், அடுத்தகட்டமாக 1500 கோடி ரூபாயும் அந்த பணிகளுக்கு விடுவிக்கப்பட்டு உள்ளது. தொடக்க பள்ளிகளை பொறுத்தவரை, பிப்ரவரி 1ஆம் தேதி முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினார். 185 ஊராட்சிகளில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் மூலம் பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகைக்குத் தக்க ஆசிரியர்களை அதிகரித்தல், கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவயம். அதற்கேற்ப செயல்படுகிறோம்.
பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட வேண்டியது அவசியம் தான். 18,000 வகுப்பு அறைகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். அதனுடன் கழிவறைகளும் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பெண்கள் பள்ளிகளில் விரைவாக கழிவறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வருவதற்கு பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
கிண்டி கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்காக குடியரசுத் தலைவரை அழைப்பதற்காக முதல்வர் டெல்லி செல்கிறார்.
பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு தற்போது முன்னுரிமை அளித்து வருகிறோம். கடந்த ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. அதன் பிறகு கொரோனா காலம் வந்தது. இன்று சீனாவிடம் இருந்து மடிக்கணினி வாங்குவதில் பல்வேறு தடைகள் இருக்கின்றன. இருப்பினும், இந்த திட்டத்தை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது. கிட்டத்தட்ட 14 லட்சம் பேருக்கு வழங்க வேண்டியிருக்கிறது. நிலையைப் பொறுத்து இந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்!
’எனக்கு பிரச்சனையே நீங்க தான்’ : பத்திரிகையாளரை திட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்!