35 மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசின் அறிக்கையை சுட்டிக்காட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (பிப்ரவரி 11) கண்டனம் தெரிவித்துள்ளார். Anbil Mahesh condemns Annamalai!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,151.60 கோடி நிதியில் முதல் தவணையைக் கூட மத்திய பாஜக அரசு இன்று வரை வழங்காமல் உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் கருத்தை மறுத்த அண்ணாமலை Anbil Mahesh condemns Annamalai!
மேலும் கடந்த 9ஆம் தேதி ”தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக அச்சுறுத்த துவங்கியதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர்” என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுவதாக பொய்யைப் பரப்பாதீர்கள்” என்று கூறினார்.
3 மாநிலங்களுக்கு மட்டும் நிதி விடுவிக்கவில்லை!
ஆனால் நேற்று இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் அளித்த பதில் அறிக்கையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் பாஜக ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, தமிழக கல்வி வளர்ச்சிக்காக வழங்க வேண்டிய நிதியைக் கூட கொடுக்காமல் வஞ்சிக்கும் பாஜக அரசை கண்டித்ததுடன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கும், பாஜக அரசு நிதி வழங்காததை கண்டித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு…
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024 – 2025’ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
அதில் “தமிழ்நாடு” இல்லை. போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு, அதில் அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிடவேண்டும்” என்று காட்டமாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.