தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் நிறைகளை கண்டறிவதற்காக ‘234/77’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
அதன்படி இன்றுவரை 175 இடங்களில் ஆய்வு செய்திருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை கடலூர் மாவட்டம் நெய்வேலி ஹெஸ்ட் ஹவுஸ்க்கு வருகை தந்த அன்பில் மகேஷ் ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை காடம்புலியூர் அரசு பள்ளி, பண்ருட்டி அரசு பள்ளி, தொழுதூர் அரசு பள்ளி, கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
திருவந்திபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், 7ஆம் வகுப்பு மாணவர்களுடன் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் சொல்லித் தரும் புறநானூறு பாடலை கவனித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஆய்வில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ள ஆய்வு நடத்தப்பட்டது.
மனதளவில் பாதிப்புள்ள மாணவர்களை தகுந்த ஆசிரியர்கள் மூலம் 44 வட்டங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் வழங்கப்படுகிறது” என கூறினார்.
தொடர்ந்து பெரம்பலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோயில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஆகஸ்ட் 20) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பள்ளிக்கு தேவையானதைக் கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டு, தலைமை ஆசிரியர் மற்றும் முக்கிய ஆசிரியர்களை அழைத்து பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு எந்த விதமான பிரச்சனையும் குறைகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு சென்றார்.
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தசூழலில், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-வணங்காமுடி
ஆவின் பெண் ஊழியர் பலி : எடப்பாடி கண்டனம்!