ஸ்ரீராம் சர்மா
மயிலாப்பூரில் எனது தந்தையாருக்கு ஸ்ரார்த்த திதி முடித்த நிம்மதியோடு, நுங்கம்பாக்கம் பக்கம் ஒரு வேலையாக சென்றவன், மகிழுந்துக்குள் யாரோ பிடறி உந்தி தள்ளியது போல் அங்கோடிச் சென்றேன்.
பேராசிரியப் பெருந்தகையாம் அன்பழகனாரது வெங்கலச் சிலையதன் முன் கண் கலங்க நின்றேன். காரணம் உண்டு !
***
1949 ல் துவங்கப்பட்டு பவள விழா ஆண்டை நோக்கி வீறுநடை போடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா எனில்,
அதன் அடிமரப் பெருங்கனத் தோற்றம் முத்தமிழறிஞர் கலைஞர் எனில்,
அன்றந்த ஆணிவேரையும் அடிமரப் பெருங்கனத்தையும் தன் உயர்ந்த கிளை மலர்களைக் கொண்டு ஓயாது கவரி வீசி ‘ஆகுக, ஆகுக’ என இளைப்பாற்றி வைத்த பெருமையும் பாங்கும் போற்றுதலுக்குரிய இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்களையே சாரும் என்கிறது திராவிட பேரியக்கத்தின் நெடிய வரலாறு !
அந்தப் பெருமகனுக்குத்தான் – பேராசிரியருக்குத்தான் – காட்டூர் கிராமத்தில் உதித்த அந்த ஆறடி உயர தமிழ்க் காவலனுக்குத்தான் – எட்டரை அடியில் நிமிர்ந்ததொரு சிலை கண்டு நெகிழ்ந்தார் மரியாதைக்குரிய நமது முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்.
பேராசிரியரின் நூற்றாண்டு விழா துவக்கத்தில், திரண்ட நன்றிக் கடனொடு அவரை ‘பெரியப்பா, பெரியப்பா’ என பலமுறை விளித்துக் கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின் என்றால் அதற்கு காரணம் உண்டு.
பலரும் பலபடப் பேசி நின்ற அந்த நாளில் – ஸ்டாலின் எனும் அந்த ஆகச் சிறந்த தலைவரை – தனது அரசியல் அனுபவ நுட்பறிவின் வழியே முதன் முதலில் அடையாளம் கண்டு அங்கீகரித்து நின்றவர் பேராசிரியப் பெருந்தகைதான் !
ஆம், ‘கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் ஸ்டாலின்தான் வாரிசு. அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு’ என அன்றே சொன்னவர் பேராசிரியப் பெருந்தகை.
இறுதியாக பேசிய ஈரோட்டு திமுக மண்டல மாநாட்டிலும் கூட இருமிக் கொண்டே அவர் அதனைத்தான் வலியுறுத்திச் சென்றார்.
கலைஞரது அரசியல் வாழ்வில் எத்துனையோ பேர் இடையிடையே கருத்து வேறுபாடு கொண்டு விலகிச் சென்றாலும் கூட, ஏறத்தாழ 75 ஆண்டுக் காலம் அவரோடு ஆழ்ந்த நட்பு பாராட்டி இழைந்திருந்தவர் இனமானப் பேராசிரியர் மட்டும்தான்.
இனமானப் பேராசிரியர் கலைஞர் மேல் கொண்டிருந்த ஆழமான நட்பை – பாசத்தை உற்று நோக்க நோக்க – கம்ப நாட்டாழ்வார் வேட்டுவ குகனது பாத்திரத்தின் மேல் ஏற்றிச் சொன்ன அந்த இரண்டு வரிகள்தான் எனது நினைவிலாடி நெக்கூருகச் செய்கிறது .
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ !?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ !?
ஆம், அரசியல் நட்புக்கு ஆகச் சிறந்த உதாரணமாகி நின்றவர் பேராசிரியர் மட்டுமே !
கொண்ட நண்பர்களிடத்தில் பாசம் செலுத்துவதில் பேராசிரியருக்கு நிகர் அவரே ! எனது தகப்பனார் ஓவியப்பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களிடத்தில் பேராசிரியப் பெருந்தகை பாராட்டிய அன்பு மிகப் பெரிது.
எனது தந்தையாரின் பளபளக்கும் வெற்றிலைப் பாக்கு பெட்டியைக் கண்டால் பேராசிரியர் குதூகலமாகிவிடுவாராம். ‘தூரிகை பிடிக்கும் உங்கள் கரத்தில் கொஞ்சம் துளிர் வெற்றிலையை கிள்ளிக் கொடுங்களேன்’ என்று கேட்டு வாங்கி போட்டுக் கொள்வாராம்.
“உங்கள் தாய்மொழி தெலுங்கு. என் தாய்மொழி தமிழ். வயதில் மூத்தவர்தான் என்றாலும் மொழி வழியே பார்த்தால் நீங்கள் எனக்கு இளையவர்தான்…” எனக் கிண்டலடிப்பாராம்.
பேராசிரியரின் மதிக் கூர்மை மிகப் பெரிது என எனது தந்தையார் வியந்து சொல்லக் கேட்டதுண்டு.
பேராசிரியரின் மனைவியார் மறைந்ததோர் நாளில் துக்கம் அனுசரிக்கச் சென்ற எனது தந்தையை கட்டி அணைத்துக் கொண்ட பேராசிரியர் ஒரு சூஃபி ஞானியைப் போல இப்படிச் சொன்னாராம்…
‘தயவுசெய்து நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்லி விடாதீர்கள். உங்களைப் போன்றவர்களும் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டால், பிறகு என் துக்கத்தை வேறெங்குதான் சென்று தொலைப்பேன்.”
ஆம், நித்சலனமாக இருப்பதுதான் ஆகப் பெரும் ஒப்பாரியாம் !
அப்படிச் சொன்ன அதே பேராசிரியர்தான் எனது தந்தையார் மறைந்த அந்த நாளில், திருவல்லிக்கேணி ஓட்டு வீட்டு மாடியில் ‘ஓ’ வென கதறி அழுதார் !
சுடுகாட்டு ஏற்பாடுகளில் இருந்தவன் அமைச்சர் வந்திருக்கிறார் என்றதும், வெட்டியான் நண்பன் சம்பத்தின் சைக்கிளை வாங்கிக் கொண்டு போலீஸ் தடைகளைத் தாண்டி விரைந்து வந்தேன். அந்த வராண்டாவில் ஓங்கி நின்றிருந்தவர் எனது சின்னஞ்சிறு முகத்தை தன் படர்ந்த இரு கரங்களால் ஆதூரமாக அள்ளிக் கொண்டார். அழுதேன்.
‘அழக்கூடாது தம்பி ! அழுதா, உங்கப்பாவுக்கு பிடிக்காதில்லையா. உறுதியா இருக்கணும். புரியுதா…!? ’ என்றபடி தலைகோதி அணைத்தார்.
தன்னைப் பேட்டி கண்ட தினத்தந்தியிடம், ‘அன்றொருநாள் பாரதியார் மறைந்த இதே வீதியில் எங்கள் திராவிடச் சூரியன் மறையக் கண்டோமே ‘ எனக் கலங்கியபடி மெல்லப் படியிறங்கிப் போனார் !
அந்தப் பாசம்தான் பேராசிரியரின் பேரடையாளம் !
இதோ, பேராசிரியரின் நெடுஞ்சிலைக்கு முன் நிற்கிறேன்.
அது, சிலையல்ல, அல்ல !
எட்டரை அடி உயர திராவிடப் பட்டறை என்றே கொள்கிறேன் !
வலது தோள் துண்டை பற்றியபடி இருக்கும் அந்த வெங்கலக் கரம் யாருமறியாததொரு மாய கணத்தில் சற்றே நீண்டு எனது இடது கன்னத்தை தட்டிக் கொடுத்து விடாதா எனும் நப்பாசையோடு மயங்குகிறேன் !
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
அறிவாசானின் திருக்குறளை ஆயாசத்தோடு நோகிறேன் !
திருவாரூர் மண்ணில்
தாய் சுவர்ணாம்பாள்
வயிற்றிலுதித்த பெருந்தகையே
ஐயா, ராமையா !
மீண்டெழுந்து ராவையா !!
கட்டுரையாளர் குறிப்பு:
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா?