“நாதக பிரிவினைவாத இயக்கமா?” : வருண் குமார் ஐபிஎஸுக்கு சீமான் காட்டமான பதில்!

Published On:

| By Kavi

நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று வருண் குமார் ஐபிஎஸ் கூறியதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில், தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி எஸ்.பி.வருண் குமாரும் கலந்துகொண்டார்.

அப்போது சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் வருண் குமார் பேசினார்.

அதில், “9 பெண்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளிநாட்டில் இருந்து அப்லோடு செய்யப்பட்டது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து கைது செய்தோம்.

நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான இயக்கம். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் நாதக உலகம் முழுவதும் வேர்விட்டுள்ளது.

நாதக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நானும் எனது குடும்பத்தினரும் இணையத்தில் தாக்குதலுக்கு உள்ளானோம்.

எனது மனைவியும் ஒரு போலீஸ் அதிகாரிதான். ஆனால் என் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

வெளிப்படையாக இரண்டு எஸ்.பி.க்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக நாங்கள் புகார் அளித்த போது, அரசும் காவல்துறையும் எங்களுக்கு உதவியாக இருந்தன.

மூன்று எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மூன்று மாதம் ஆகியும் இன்னும் முகநூல், எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கப்படவில்லை. இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

நாடு முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று வருண்குமார் ஐபிஎஸ் கூறியது நாதகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று (டிசம்பர் 5) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், “நாதக கண்காணிக்க வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று வருண் குமார் சொல்லியிருக்கிறாரே “என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “வருண் குமார் ரொம்ப நாளாக எங்களை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார். புதிதாக கண்காணிக்க ஒன்றுமில்லை” என்றார்.

பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “இந்திய அரசியலமைப்பின்படி பதிவு செய்யப்பட்ட கட்சி நாதக. 13 ஆண்டுகளாக மக்களை சந்தித்து தேர்தலில் நின்று வருகிறோம். இது மக்கள் இயக்கம். 36 லட்சம் வாக்குகளை வாங்கி, தனிச் சின்னம் பெற்றிருக்கிறோம்.

நீங்கள் திடீரென பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என சொன்னால் எஸ்.பி. வருண்குமார் தான் நாட்டை ஆளுகின்றாரா?.

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்ததே, அப்பொழுது பிரிவினை இயக்கம் என்பது தெரியாதா?. எதைவைத்து பிரிவினைவாதம் என்கிறார்? அடிப்படை தகுதியே இல்லாமல் வருண்குமார் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார்?.

தமிழ் சாவ்னிஸ்ட் என்கிறார்… ‘நாம் தமிழர்’ என்றால் தமிழ் சாவ்னிஸ்ட்டா… அப்படியானால் எதற்கு இவ்வளவு மொழிவழி மாநிலங்களை பிரித்திருக்கிறார்கள்.
இந்தி படித்தால் இந்தி சாவ்னிசமா…அதைப்பற்றி பேசுவாரா. தமிழை பேசினால் சாவ்னிசமா… பிரதமர் மோடி தமிழை பற்றி பேசுகிறாரே… அப்படியானால் அது தமிழ் சாவ்னிசமா…

வருண்குமார் தாய் மொழி எது. தமிழ் தாய்க்கும், தந்தைக்கும் பிறந்திருந்தால் தமிழ் சாவ்னிசம் என்ற வார்த்தையை சொல்லி இருப்பாரா?

இவர் என் மனைவியை, தாய் தந்தையை, என் கட்சியில் உள்ள தங்கைகளை எவ்வளவு இழிவாக பேசியிருக்கிறார். வழக்கு எடுப்பாரா?

இந்த காக்கி சட்டையில் எத்தனை வருடம் இருப்பார்… ஒரு 50 வருடம். அதன்பின்னர் இறங்கி தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். பார்த்து பேச வேண்டும்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த விழாவில் மற்றவர்கள் பேசியது வராமல் வருண் குமார் பேசியது மட்டும் வருகிறதே எப்படி? இந்த காணொளி எல்லா ஊடகத்துக்கு அனுப்பி ரகசியம் பாராட்டுகிறாரா?

வேலையில் சேர்ந்து உறுதிப்பிரமாணம் எடுத்த பொழுது இப்படித்தான் எடுத்தாரா? என் கட்சியை குறை சொல்வதற்காக ஐபிஎஸ் ஆனாரா?. மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம். ஆஃப்ட்ரால் இவர் ஒரு ஐபிஎஸ்… அவ்வளவுதான்” என்று காட்டமாக கூறினார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி எஸ்பி வருண்குமாருக்கும் நீண்ட நாட்களாகவே புகைச்சல் இருந்து வருகிறது.

முன்னதாக நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த சீமான், மேடையிலேயே வருண்குமாரை காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்து வருண்குமார் குடும்பத்தினரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதையடுத்து வருண்குமார் மற்றும் அவரது மனைவி ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகினர்.

அப்போது சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்த வருண்குமார் ஐபிஎஸ், திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ தனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி படித்து, உழைத்துப் பெற்ற வேலை என்று கூறியிருந்தார்.

இதற்கு சீமான், ஐபிஎஸ் அதிகாரியாக இல்லாமல், திமுகவின் ‘ஐடி விங்’ ஆக வேலை செய்கிறீர்கள் என்று வருண் குமாரை கடுமையாக சாடியிருந்தார்.

இப்படி, சீமானுக்கும், வருண் குமாருக்கும் இடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரத்தில் தொடங்கிய இந்த புகைச்சல் தற்போது, நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று கூறியதன் மூலம் எரியத் தொடங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அடேங்கப்பா… பிட்காயின் மதிப்பு இவ்வளவு உயர்ந்திடுச்சா?

சந்திரபாபு நாயுடுவை கைது செய்த ஐபிஎஸ் சஸ்பெண்ட்… பின்னணி இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel