இங்கிலாந்து பிரதமராக முயலும் இந்திய வம்சாவளிஅரசியல்வாதி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

நம் தொலைக்காட்சி சேனல்கள் தினமும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் பிரச்சினை பற்றி பேசினால் போதும் என்ற நிலையில் உலக அரசியலில் வேறு எவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தாலும் கண்டு கொள்வதில்லை. உண்மையில் நாம் பிற  நாடுகளில் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டால்தான் உள்ளூர் அரசியல் குறித்தும் தெளிவாகப் பேச முடியும். ஆனால், நமது அரசியல் விவாதம் என்பது கிரிக்கெட் மேட்சில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது போல எப்போதும் வெற்றி – தோல்வி, கூட்டணிக் கணிப்புகளாகவே இருக்கிறதே தவிர, கருத்தியல் என்ன, பிரச்சினை என்ன என்று எது குறித்தும் ஆழமாகச் செல்வதில்லை. உயர் கல்வியில், பொருளாதார வளர்ச்சியில் எல்லாம் தமிழகம் முன்னேறி இருந்தாலும், அரசியலை ஆழமாக, கருத்தியல், வரலாறு சார்ந்து விவாதிப்பதில் இன்னும் ஆர்வம் ஏற்படாமல் உள்ளது. அரசியல் வல்லுநர்கள் என்பவர்கள் ஜோசியக்காரர்களை போல யூகங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  நாளை தேர்தல் வந்தால் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு அதிகம் இருக்குமா, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அதிகம் இருக்கமா? தினகரன், சசிகலா, ஓபிஎஸ் எல்லோரும் சேர்ந்துவிட்டால் அவர்கள் கை ஓங்குமா? இப்படி யூகங்களையே பேசுவதால், ஓர் அரசியல் கட்சி என்பது என்ன, உலகின் பிற நாடுகளில் அவை எப்படிச் செயல்படுகின்றன, அதற்கும் இங்கே அவை செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதையெல்லாம் விவாதிக்கவே வகையில்லாமல் இருக்கிறது. அதனால் இந்த வாரம் இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்பதை குறித்து சில விவரங்களை ஒப்பு நோக்கி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பலத்த எதிர்ப்பின் காரணமாக பதவி விலகி விட்டார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது. அவர் சார்ந்துள்ள கன்சர்வேடிவ் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. எனவே அந்தக் கட்சி ஒரு புதிய பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் என்ன வேடிக்கை என்றால் அவர்கள் விதிமுறைகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் வாக்களித்துத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதைச் சொன்னவுடன் உங்களுக்கு யாராலும் மதிக்கப்படாத எம்ஜிஆர் உருவாக்கிய அஇஅதிமுகவின் கட்சி விதிமுறைகள் நினைவுக்கு வரும். அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துத்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அஇஅதிமுக போல ஒன்றரை கோடி தொண்டர்கள் என்றெல்லாம் கற்பனை கதைகள் இங்கிலாந்தில் பேசுவதில்லை. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அதிகபட்சம் போனால் இரண்டு லட்சம் பேர்தான். அநேகமாக 1.6 லட்சம் பேர்தான் என்று கூறப்படுகிறது. அந்த 1.6 அல்லது 2 லட்சம் பேர் மட்டும்  வாக்களித்து அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அவர்கள் இப்போதிலிருந்து ஆகஸ்ட் இறுதிவரை வாக்களிக்கலாம். இணையம் வழியாகத்தான் வாக்களிக்கப் போகிறார்கள். செப்டம்பர் 5ஆம் தேதி முடிவு தெரியும்.

பிரதமர் பதவிக்கு இரண்டு பேர் போட்டியிடுகிறார்கள். ஒருவர் கருவூலத்தின் சான்சலர் என்று அழைக்கப்படும் நிதியமைச்சர். அவர்தான் இந்திய வம்சாவளியினரான, நாற்பத்தி இரண்டு வயது நிரம்பிய ரிஷி சுனாக். மற்றொருவர் வெளியுறவு அமைச்சர், நாற்பத்தேழு வயதான எலிசபெத் டிரஸ். இவர்கள் இருவரும் அவர்களது கொள்கைகளை விளக்கி விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சுனாக்கைவிட, டிரஸ்தான் முன்னணியில் இருக்கிறார் என்பதை சுனாக்கே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் இறுதி வரை போராடுவேன் என்கிறார். கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும் என்றாலும் ஒட்டுமொத்த தேசமும் அவர்கள் விவாதங்களைப் பார்க்கத்தான் வேண்டும்.

இங்கிலாந்து அரசியலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

இங்கிலாந்து என்பதன் அதிகாரபூர்வமான பெயர் யுனைடெட் கிங்டம். இதில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாண்ட், வடக்கு அயர்லாண்ட் என நான்கு  நாடுகள் உள்ளன. அதனால்தான் ஒருங்கிணைந்த நாடுகள், யுனைடெட் கிங்டம் என்று பெயர். இதில் இங்கிலாந்துதான் பெரிய நாடு என்பதால் பேச்சு வழக்கில் அவ்வாறே வழங்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த நூறாண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்யும் கட்சிகள் டோரி என்று அழைக்கப்படும் கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சி என்ற தொழிலாளர் கட்சியும்தான். அதற்கு முன்னால் லிபரல் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் ஆட்சி புரிந்து வந்தன. தொழிலாளர் கட்சி முக்கியத்துவம் பெற்ற பிறகு, லிபரல் கட்சி முக்கியத்துவம் இழந்து சிறிய கட்சியாக உள்ளது. வேறு சில சிறிய கட்சிகளும் உள்ளன.

இப்போதைய கணக்கில் இங்கிலாந்தின் மக்கள் தொகை ஆறரை கோடி பேர்.  தமிழ்நாட்டைவிட  குறைவானது. மக்கள் செய்யும் பணிகளை வைத்து சமூகத்தை ஆறு அடுக்குகளாக பிரிக்கிறார்கள்.

A –   உயர் மத்தியதர வர்க்கம் உச்ச நிலை பதவி வகிப்பவர்கள்     4% பேர்

B      நடு மத்தியதர வர்க்கம்  இடைநிலை பதவி வகிப்பவர்கள்     23% பேர்

C 1   கீழ் மத்தியதர வர்க்கம்   இள நிலை பணிகளில் உள்ளோர்   28% பேர்

C 2   திறன்பெற்ற உழைக்கும் வர்க்கம்  பயிற்சி பெற்ற பணிகள் 20% பேர்

D      ஓரளவு திறன்பெற்ற, திறன்பெறாத உழைக்கும் வர்க்கம்       15% பேர்

E      பணிகளற்றவர்கள், ஓய்வூதியக்காரர்கள், தினக்கூலிகள்       10% பேர்  

இந்த ஆறு பிரிவினரை ABC1, C2DE என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். சற்றே வசதியான மத்தியதர வர்க்கம் என்பதில் 55% பேர் வந்துவிடுகின்றனர். உழைக்கும் வர்க்கம், தினக்கூலிகள் என்பதில் 45% மட்டுமே உள்ளனர். கன்சர்வேடிவ் கட்சி அதிகம் ABC1  சார்ந்ததாகவும், லேபர் கட்சி அதிகம்  C2DE  சார்ந்ததாகவும் கருதப்பட்டாலும், இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே இயல்பாகவே ABC1 பிரிவில்தான் இருப்பார்கள். இதன் காரணமாக அரசியலில் ஒரு மந்தத்தன்மை நிலவினாலும், அமெரிக்கா போலவே உட்கட்சி ஜனநாயகம் என்பதும், மக்கள் கருத்தைக் கேட்பது என்பதும் செயல்படுகின்றன.  

உதாரணமாக 53 லட்சம் பேர் கொண்ட ஸ்காட்லாண்ட் வெகுகாலமாக தனி நாடாக இருக்க வேண்டும் என்று கோரி வருகிறது. 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாண்ட் சுதந்திரமடைவது குறித்து அந்த பகுதியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 44% பேர் தனியாகப் போக வேண்டும் என்றும், 56% பேர் தனியாகப் போக வேண்டாம் என்றும் வாக்களித்ததால் அது இங்கிலாந்திலேயே, அதாவது யுனைடெட் கிங்டம் என்பதிலேயே அதிக அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு இருந்துவிட்டது. அந்த சமயத்தில் யு.கே. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தது. இங்கிலாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்ற தேசியவாத கோரிக்கை வலுவடைந்தது. அதனால் 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரெக்சிட் என்று பெயர். பெரும்பான்மை வாக்குகள் பிரெக்சிட்டிற்கு ஆதரவாகவே கிடைத்ததால் இங்கிலாந்து ஒன்றியத்திலிருந்து விலகி விட்டது. ஆனால் வெளியேறுவதற்கான  நிபந்தனைகள் என்ன என்பது குறித்து பிரச்சினைகள் எழுந்தன. இதன் உச்சகட்டத்தில்தான் 2019ஆம் ஆண்டு எந்த நிபந்தனையுமின்றி வெளியேற வேண்டும் என்ற போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சி தலைவராகப் பிரதமரானார்.

அதன் பிறகு கடந்த மூன்றாண்டுகளில் கொரோனா தொற்றும், பல்வேறு சர்ச்சைகளும் அவரை சூழ்ந்தன. பொது ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலகங்களில் மட்டும் பார்ட்டிகள் நடத்தப்பட்டன, அவரும் கலந்துகொண்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. பதவியைப் பயன்படுத்தி தன் வீட்டை தனியார் நிறுவனத்தின் மூலம் புதுப்பித்துக் கொண்டார் என்பது ஒன்று. அவருடைய அமைச்சரவை சகா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தும் அவருக்குப் பதவியை அளித்தார் என்பது ஒன்று. இப்படி அலை, அலையான சர்ச்சைகளின் உச்சத்தில் அவரது அமைச்சரவை சகாக்கள் எல்லாம் கூண்டோடு பதவி விலகத் தொடங்க, வேறு வழியில்லாமல் அவர் பதவி விலக முன்வந்தார். அதனால்தான் அவர் இடத்துக்கு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க இப்போது கட்சிக்குள் தேர்தல் நடக்கிறது.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், நாடாளுமன்றக் கட்சி தலைவரான பிரதமருக்கு எதிராக பிற உறுப்பினர்கள் குரல் எழுப்பலாம் என்பதும், அது கட்சி கட்டுப்பாட்டை மீறியது ஆகாது என்பதும்தான். தமிழ்நாட்டில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை நாங்கள் ஏற்கவில்லை, அவரை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரச் சொல்லுங்கள் என கவர்னரிடம் மனு அளித்தபோது, அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சொல்லி அவர்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்ததை நாம் நினைவுகூர வேண்டும். அந்த 18 பேர் அவ்வாறு செய்யக் காரணம், அவர்கள் அஇஅதிமுக ஆட்சி தொடர வேண்டும், ஆனால் முதலமைச்சர் மாற வேண்டும் என்று நினைத்ததுதான். ஆனால் இந்தியாவில் இதனை எப்படி செய்வது என்பது குறித்த விதிகள் தெளிவாக இல்லை. கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தேர்வுக்கான அதிகாரத்தை மறுதலிப்பதாகவே நமது நடைமுறைகள் உள்ளன.

ரிஷி சுனாக் யார்? லிஸ் டிரஸ் யார்?

ரிஷி சுனாக்கின் பெற்றோர் பஞ்சாபிலிருந்து ஆப்பிரிக்கா வழியாக புலம் பெயர்ந்து சென்று இங்கிலாந்தில் அறுபதுகளில் குடியேறியவர்கள். அவருடைய அப்பா ஒரு மருத்துவர். அம்மா பார்மஸிஸ்ட். மத்தியதர வர்க்கமாக இருந்தாலும், பிள்ளைகளை சிறந்த பள்ளிகளில் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தினார்கள். ரிஷியும் நன்றாகப் படித்து, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பி.பி.இ எனப்படும் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவை அடங்கிய பட்டம் பெற்று பின்னர் ஃபுல்பிரைட் ஸ்காலர்ஷிப்புடன் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். அங்குதான் அவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்சரா மூர்த்தியை சந்தித்தார். முதலீட்டிய நிதியாளரான ரிஷி சுனாக் விரைவிலேயே கோடீஸ்வரராக வளர்ந்தார். அக்சரா மூர்த்தியை மணந்தார். அக்சராவிடம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் 0.91% இருக்கின்றன. அதன் மதிப்பு 70 கோடி பவுண்டுகள். இந்த தம்பதியினரின் சொத்தின் மதிப்பு 73 கோடி பவுண்டுகள்.  ஒரு பவுண்டு தோராயமாக நூறு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் இந்திய மதிப்பில் 7300 கோடி ரூபாய். இங்கிலாந்தின் பணக்காரர்கள் வரிசையில் 222ஆவது இடம் இவர்களுக்கு உள்ளது. பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்குள் இவர் பெரிய பணக்காரராகப் பார்க்கப்படுகிறார். அது இவருக்கு எதிரான ஒரு பிரச்சாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இவருக்கு எளிய மனிதர்களின் கஷ்டங்கள் புரியாது எனப்படுகிறது. இதற்கு பதிலாக ரிஷி எப்படி தன்னுடைய பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்து கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்தார்கள் என்பதையெல்லாம் கூறி தனக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கை தெரியும் என்று பிரச்சாரம் செய்கிறார்.

இங்கிலாந்தின்  ஆறரைக் கோடியில் அறுதிப் பெரும்பான்மை 87% பேர் வெள்ளை நிறத்தவர். ஆசியர் / ஆசிய வம்சாவளியினர் 6.3%. இதில் குறிப்பாக இந்திய வம்சாவளியினர் 2.3%. கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் பேர் இருக்கலாம். அவர்களில் ஒருவரான ரிஷி சுனக் ஆங்கிலம் பிரிட்டிஷ்காரர்களைப் போல பேசுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று தீவிர தேசியவாத பிரச்சாரம் செய்தவர். குடியேற்றத்துக்கு எதிரானவர். ஆனால், தன்னை இந்து என்றுதான் சொல்லிக்கொள்கிறார்.  கீதையின் மீதுதான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார். இப்படி ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சற்றே கறுப்புத் தோல் கொண்ட ஒருவரைப் பிரதமராக ஏற்பார்களா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் அவர் திறமையானவர், பொருளாதாரத்தில் கெட்டி என்று ஒரு பிரச்சாரம் இருக்கிறது.

இவரை எதிர்த்து நிற்கும் எலிசபெத் டிரஸ், ஒரு கணித பேராசிரியரான தந்தைக்கும், நர்ஸாகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்த அன்னைக்கும் பிறந்தவர். இருவரும் லேபர் கட்சிக்குள்ளேயே அதிக இடதுசாரி மனோபாவம் கொண்டவர்கள். ஆக்ஸ்ஃபோர்டில் ரிஷி போலவே பி.பி.இ படித்த எலிசபெத், லிபரல் டிமாக்டிக் குழுவின் தலைவராக இருந்தார். பின்னர் 1996ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் படிப்படியாக முன்னேறி நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சர் பொறுப்புகளுக்கும் வந்தார். ஒரு தீவிர வலதுசாரியாக இப்போது பணக்காரர்களுக்கு மேலும் வரிச்சலுகை அளிப்பேன் என்று பேசி வருகிறார். ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் இவர் 2016ஆம் ஆண்டு பிரெக்சிட்டுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என நிலைப்பாடு எடுத்தவர். ஆனால் மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்த பிறகு இவர் தீவிர பிரெக்சிட் ஆதரவாளராக மாறிவிட்டார்.

இந்த நிலையில் இருவருமே ஒரே கட்சி, ஒரே கொள்கை என்றாலும் யார் எந்த பிரச்சினைக்கு அதிக அழுத்தம் தருகிறார்கள், அவர்கள் ஆட்சித்திறன் எப்படியிருக்கிறது என்பதே கேள்வியாக இருக்கிறது.  நம் பார்வையில் குறிப்பிடத்தகுந்த விஷயம் அங்கே இத்தாலி நாட்டில் பிறந்த சோனியா காந்தி பதவிக்கு வரக்கூடாது என்னும் பாஜக, வந்தேறிகள் என்று வம்சாவளியினரைப் பேசும் நாம் தமிழர் போன்ற பாசிச சக்திகள் இல்லையென்பது. ரிஷி சுனாக் என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்  நிதியமைச்சராக உள்ளார். பிரதமர் பதவிக்கும் போட்டியிடுகிறார் என்பது முக்கியமானது. மற்ற வகையில் அவர் அரசியல் முற்போக்கு அரசியலாக இருக்காவிட்டாலும், சிறுபான்மை இனத்தவர் பிரதமராவது என்ற வகையில் அது உலக அரசியலில் முதிர்ச்சியின் அடையாளமாக இருக்கும் எனலாம். அது  நடக்குமா என்பது செப்டம்பர் 5ஆம் தேதி தெரிந்துவிடும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.