புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
போராட்டக்காரர்கள் பல இடங்களில் மின் இணைப்பை துண்டித்ததால் மின் தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
புதுவை முழுவதும் இருளில் மூழ்கியதால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மின் ஊழியர்களுக்கு ஆளுநரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என கூறியிருந்தனர்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆவடியில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (துணை ராணுவம்) வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் அடையாள அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஜெயகுமார், சாய் சரவணகுமார் மற்றும் தலைமை செயலாளர் ராஜீவ் சர்மா, டிஜிபி மனோஜ் குமார் லால் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமுல்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கலை.ரா
புதுவை மின் ஊழியர்கள் மீது பாயும் எஸ்மா சட்டம்?
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிறுவன் பலி!