ஸ்டாலின் குட் புக்கில் அமுதா: உள்துறை செயலாளரான கதை!

அரசியல் தமிழகம்

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகவும் உயர்ந்த அதிகாரமிக்க பொறுப்பான உள்துறை செயலாளர் பதவிக்கு பெண் ஐஏஎஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தர்மபுரி, காஞ்சிபுரம் கலெக்டர், தமிழக உணவுப் பாதுகாப்பு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் துறை ஆணையர், தமிழக அரசின் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர், தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குநர், தமிழக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உறுப்பினர் செயலாளர், தமிழக பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அமுதா ஐ.ஏ.எஸ்.

மேலும் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தில் திட்ட அலுவலர், பிரதமர் அலுவலக இணை செயலாளர் என்று உலக நாடுகள் மற்றும் தேசிய அளவிளாக உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.

இளம் வயதில் ஐஏஎஸ் கனவு!

Amudha IAS Promoted as Principal Secretary

மதுரையைச் சேர்ந்த அமுதா பின் தங்கிய சௌராஷ்ட்ரா சமூகத்தின் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் சுட்டியாக இருந்த அமுதா, “நான் நன்றாகப் படித்தேன். எந்தத் துறைக்கான படிப்பாக இருந்தாலும் என்னால் திறம்பட வெல்ல முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். ஆக ஆசைப்பட்டேன். என்னுடைய 13 வயதில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என கனவு கண்டேன். 23 வயதில் ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டேன்” என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

மணல் கொள்ளையர்கள் மிரட்டல்!

1994 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த அமுதா, தர்மபுரி கலெக்டராக இருந்தபோது சிறந்த கலெக்டருக்கான விருது பெற்றவர். பின் தங்கிய மாவட்டமான தர்மபுரியில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துத் திறம்பட பணிகளைச் செய்தவர்.

காஞ்சி கலெக்டராக இருந்தபோது மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கைளைத் தீவிரமாக மேற்கொண்டதால் கொள்ளையர்கள் அமுதாவை லாரியை மோதி கொல்ல முயற்சித்தனர். எனினும் அதிலிருந்து தப்பிய அமுதா ஐ.ஏ.எஸ் முன்பை விடவும் தீவிரமாக செயல்பட்டு மணல் கொள்ளையை கடுமையாக ஒடுக்கினார்.

2015 சென்னை மழை வெள்ளம் மீட்பு சிறப்பு அலுவலராக இருந்த அமுதா களத்தில் இறங்கி கடுமையாகப் போராடி பலரைக் காப்பாற்றினார்.

அப்துல் கலாம், ஜெயலலிதா, கலைஞர் என தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டின் முக்கிய தலைவர்கள் மறைந்தபோது அவர்களின் இறுதி நிகழ்ச்சிகள் அமைதியாக ஒழுங்காக நடைபெறுவற்கு விரிவான ஏற்பாடுகளை பொறுப்புடன் ஏற்று செயல்படுத்தியவர் அமுதா.

அதுவும் குறிப்பாக கலைஞர் மறைந்தபோது எங்கே இறுதி நிகழ்ச்சி என்ற வினா அனைவரது மனதிலும் இருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று கடைசி நேரத்தில் தீர்ப்பளித்தது. எனினும் சில மணி நேரங்களிலேயே மெரினாவில் இடத்தை தயார் செய்து இறுதி நிகழ்வை அமைதியாக நடத்தியதற்காக கலைஞர் குடும்பத்தினர் அமுதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சுனாமி களப்பணியில் அமுதா

கலெக்டர், உணவுப் பாதுகாப்பு முதன்மை அலுவலர், தமிழகத்தின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர் என்று தமிழக அரசுப் பணிகளில் இவ்வாறு என்றால்… ஐ.நா.சபையின் நீர் மற்றும் சுகாதாரத்துக்கான நிதியத்தின் திட்ட அலுவலராகவும் பணியாற்றினார். அந்தப் பணியில் அமுதா இருந்தபோதுதான் தமிழகத்தை சுனாமி தாக்கியது.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் சுனாமி தாக்குதலை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டு நிறுவனங்களும், பொது அமைப்புகளும் உதவிக்காக வந்தனர். அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பது, தற்காலிக வீடுகள் அமைப்பது, உடைகளை வழங்குவது ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் யாருமே சுனாமிக்குப் பிறகான கடலோர மக்களின் சுகாதாரம், கழிவுகளை அகற்றுதல் பற்றி பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

நீர் மற்றும் சுகாதார திட்ட அதிகாரியாக இருந்த அமுதாவின் முதல் கவனமே சுகாதாரம் மீதுதான் திரும்பியது. இதை ஒரு பேட்டியில் அமுதாவே வெளிப்படுத்தியுள்ளார்.

“சுனாமி தாக்குதலுக்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் மக்கள் பள்ளிகள், அரசுக் கட்டிடங்கள், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு கழிவறை வசதி இல்லை. உணவு கொடுக்கப்படுகிறது, உடை, உறைவிடம் இருக்கிறது. ஆனால் கழிவறை வசதி அவர்களுக்கு இல்லை.

மீனவ மக்கள் இயல்பாகவே காலைக் கடன்களை கழிக்க கடலோரம் செல்வார்கள். ஆனால் சுனாமிக்குப் பிறகு கடலைப் பார்க்கவே அவர்களுக்கு பெரும் அச்சமாக இருந்தது. அதனால் தற்காலிகக் குடியிருப்புகளைச் சுற்றியே மலம் கழிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

சில நாட்களில் இது பெரும்பிரச்சினையாக மாறியது. சுனாமியால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளால் காலரா போன்ற தொற்று நோய் பரவி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில் தான் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் என்.ஜி.ஓ.க்களிடம் இதுபற்றிப் பேசினோம். குடியிருப்புகளைச் சுற்றியிருக்கும் மனிதக் கழிவுகளை அகற்ற உதவ வேண்டும் என்று நானே அவர்களிடம் கேட்டேன். எந்த ஒரு என்.ஜி.ஓ.வும் அதற்கு உதவவில்லை. வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறோம், இதைத் தவிர என்று மறுத்துவிட்டனர். இறந்து கிடக்கும் மனித உடல்களை அகற்றுவதற்கு தயாராக இருந்த அவர்கள், மனிதக் கழிவுகளை அகற்ற மறுத்துவிட்டனர்.

அப்போதுதான் மற்றவர்களை கேட்பதை விட நாமே இதை செயல்படுத்தி முன்னுதாரணமாக இருப்போம் என்று முடிவெடுத்தேன். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தன்னார்வலர்களை அழைத்தேன். இருபது பேர் வரை என்னுடன் வந்தார்கள். கிளவுஸ் அணிந்துகொண்டோம், முகக் கவசம் அணிந்துகொண்டோம், வாரி எடுக்கும் உபகரணங்களை எடுத்துக் கொண்டோம்.

நாங்களே மனிதக் கழிவுகளை அள்ளி அப்புறப்படுத்தி எரித்தோம். இந்தப் பணிதான் சுனாமிக்குப் பிறகான தொற்று நோய் மரணங்களைத் தடுத்து நிறுத்தியது. இதை என் பணியின் முன்னுதாரண அம்சமாக நான் கருதுகிறேன்” என்று எவ்ரிடே லீடர்ஷிப் என்ற இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் அமுதா மனம் திறந்து கூறியுள்ளார்.

பொதுவாகவே பிரதமர் மோடி நிர்வாகத் திறமையுள்ள அதிகாரிகளை பருந்துப் பார்வையோடு கண்டறிந்து அவர்களை உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில், நிர்வாகத் திறமையும், அடித்தட்டு மக்கள் மீதான அக்கறையும், இயல்பான தாய்மை குணமும் ஒருங்கே அமையப்பெற்ற ஐ.ஏ.எஸ்,. அதிகாரி அமுதா பற்றிய முழு தகவல்களையும் அறிந்து அதன் அடிப்படையிலேயே இந்திய நாட்டின் உயர்ந்த ஜனநாயக அலுவலகமான பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அமுதா.

Amudha IAS Promoted as Principal Secretary

ஊரக வளர்ச்சிதுறை செயலாளராக அதிரடி காட்டிய அமுதா

இந்தநிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் மாநில பணிக்கு திரும்பினார். அவரை ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளராக தமிழ்நாடு அரசு நியமித்தது. பதவியேற்ற பின் சில நாட்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதில், அனைத்து ஊராட்சி பொறியாளர்கள், செயலாளர்களும் ஊராட்சிகளில் உள்ள ஏரிகளை மீன் குத்தகைக்கு ஊருக்குள் பேசி ஏலம் விடப்படும் நடைமுறை இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். ஏரி, குளங்களை ஏலம் விட வேண்டும் என்றால் முதலில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்குரிய அலுவலர்கள் முன்னிலையில் தான் ஏலம் விட வேண்டும். அந்த ஏல தொகையை அரசு அலுவலகங்களில் தான் கட்ட வேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார்.  

ஊரக பகுதிகளில் குக்கிராமங்களை பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகளுடன் இணைப்பதற்கான சாலை மேம்பாட்டு திட்டம், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வடிகால் வசதி செய்யப்பட்டது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு என இவர் மேற்கொண்ட பல திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.

இந்தசூழலில் தான் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் மே 11-ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டது தான்.

சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை என மிகவும் சவாலான அதிகாரமிக்க பொறுப்பிற்கு அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த துறையில் அவர் ஆற்றும் செயல்பாடுகளை காண அரசு மட்டுமின்றி தமிழக மக்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அவரது உத்வேகமான செயல்பாடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும்.

மேலும் அவர் போன்று ஐ.ஏ.எஸ் ஆக சாதிக்க துடிக்கும் எத்தனையோ பிஞ்சு குழந்தைகள், மாணவர்களின் உள்ளத்தில் கனவுகளை அடைவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த உள்துறை செயலாளர் பதவி முக்கிய இடம் வகிக்கும்.

இந்த நேரத்தில் பல செய்தி தளங்களிலும் அமுதா ஐஏஎஸ் தமிழகத்தின் முதல் உள்துறை செயலாளர் என்று செய்தி வெளியிட்டுவருகின்றனர். ஆனால் இதற்கு முன்பு தமிழகத்தில் சாந்தா ஷீலா நாயர், ஷீலா ராணி சுக்நாத், மாலதி, உள்ளிட்டோர் உள்துறை செயலாளர்களாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

டிஜிட்டல் திண்ணை: கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா… எதிர்க்கட்சிகளின் பொது மேடை ஆக்குவாரா ராகுல்?

கர்நாடகா தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்

+1
1
+1
1
+1
1
+1
13
+1
1
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *