ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளருமான சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் சேகரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேகர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு அறிக்கையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக, ரெங்கசாமி (கழக துணைப்பொதுச்செயலாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,) இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா