பழனிசாமியும் பத்து பேரும் விரைவில் தண்டனை அடைவர்: டிடிவி தினகரன்

அரசியல்

அமமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (ஆகஸ்டு 15) நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அமமுக கழக பொதுச்செயலாளர், தலைவர், துணை தலைவர் தேர்தல் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டதிட்டங்களை அதிமுகவினர் மீறிவிட்டார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமி தவறானவர், துரோக சிந்தனை உள்ளவர், தனது சுயநலத்திற்காக யாரையும் கெடுக்கக் கூடியவர் என்றும் காட்டமாக பேசினார்.

பொதுக்குழுவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசும் போது, “அதிமுகவில் இருப்பவர்கள் கூலிக்கு வேலை செய்கின்ற கூட்டம், மத்திய அரசின் தயவோடு தான் நான்கு ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை நடத்தினார்கள்.

தேர்தல் வெற்றி, தோல்வி என்னை பாதித்ததில்லை. நமது இயக்கம் சோழ மண்டலத்திலும், பாண்டிய மண்டலத்திலும் தான் வலுவாக இருப்பதாகவும் கொங்கு மண்டலத்திலும், தொண்டை மண்டலத்திலும் நமக்கு ஒன்றுமே இல்லை என்று பலர் கேலி பேசுகிறார்கள்.

வரும் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நாம் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். புரட்சி தலைவர் உருவாக்கிய இயக்கம் இன்றைக்கு அல்லல்படுவதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

காசு கொடுத்து தனது சொந்தக் கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்க வேண்டிய நிலை எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு 90 சதவிகிதம் ஆதரவு இருக்கிறது என்றால் முறையாக தேர்தல் நடத்தி வெற்றி பெற வேண்டியது தானே. வரும் காலத்தில் இரட்டை இலையை மீட்டெடுக்கப்போவது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான்.

அதிமுகவினர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டதிட்டங்களையே மீறிவிட்டார்கள். தனது முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டவுடன் ஓபிஎஸ் அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டார். பின்பு தனது தவறை உணர்ந்துவிட்டார். பழனிசாமி மாறவில்லை, துரோகங்களை செய்து வருகிறார்.

மேடையிலே நான்கு கால் பிராணி போல் ஊர்ந்து வந்து முதலமைச்சர் பதவி கொடுத்த நமது சின்னம்மாவிற்கு துரோகம் செய்தார்.

அதிமுக ஆட்சி போய்விடுமோ என்ற நேரத்திலே மீண்டும் வந்து அவருக்கு ஆதரவு அளித்த பன்னீர் செல்வத்திற்கு துரோகம் இழைத்தார். பொதுச்செயலாளர் என்ற பதவி அம்மா அவர்களுக்கு மட்டும் தான், பொதுச்செயலாளர் விதிகளில் திருத்தம் செய்து அம்மா அவர்களுக்கே துரோகம் செய்து விட்டார். தற்போது நீதிமன்றத்தில் இதுகுறித்து பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறார்.  

பழனிசாமி திருந்தினால் அவரோடு இணைவது குறித்து யோசிப்போம். எனக்கு தெரிந்த வரை அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களுக்கே எடப்பாடி பழனிசாமி, பதவி வெறியிலே துரோகம் செய்யக்கூடியவர்.

எடப்பாடி பழனிசாமி தவறானவர், துரோக சிந்தனை உள்ளவர், தனது சுயநலத்திற்காக யாரையும் கெடுக்கக் கூடியவர். பழனிசாமியுடன் நெருக்கமாக உள்ள பத்து பேர் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்ககூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அம்மாவின் தொண்டர்களை அவர்கள் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. இவர்கள் தூக்கி எறியப்படக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. வருங்காலத்தில் இவர்கள் தங்களது தவறுகளுக்கு, துரோகங்களுக்கு தண்டனை பெறப் போகிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜாதி கட்சி போன்று ஒரு பகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். அமமுக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் துரோகிகளை வெற்றி பெற முடியாமல் செய்தது அமமுக தான்.

எடப்பாடி பழனிசாமி இல்லாமல் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். 50 பேர் அமமுக வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் அதிமுகவுடன்  கூட்டணிக்கு வருகிறேன் என்று நான் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அதிமுகவினரிடம் கூறினேன்.

ஆனால் அவர்கள் என்னைப் பார்த்து பயந்து விட்டார்கள். கூட்டணி அமையவில்லை. குறுக்கு வழியில் வந்தவர்கள் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு நாட்டைக் கொள்ளையடிக்கின்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரும்.

திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்கு காரணமாக இருந்தது பழனிசாமி கொள்ளைக் கூட்டம் தான். நாம் ஒருபோதும் துரோக சிந்தனை உள்ளவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக மறந்து விட்டது. தமிழ், சமூக நீதி என்று திமுக மக்களை ஏமாற்றுகிறார்கள்.” என்று பேசினார் டிடிவி தினகரன்.

செல்வம்

கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு: ஸ்டேட் வங்கியின் சுதந்திர தின பரிசு!

+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *