அமமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஆக.15-ல் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று அமமுக கட்சியின் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், “கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி, ஒசூர் வரைக்கும் 234 தொகுதியிலும் அமமுகவுக்கு கட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். அம்மாவால் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் தற்போது நீதிமன்றத்தில் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும். அந்த அளவிற்கு தான் அதிமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப் பதவியை எல்லோரையும் கவர்ந்து, வசப்படுத்தி வாங்கியுள்ளார் எடப்பாடி.
எந்த வழக்கில் சிறைக்கு செல்ல போகின்றாரோ என்ற அச்சத்துடன் ஈபிஎஸ் அணி இருந்து வருகிறது. இதற்கு யார் காலையாவது பிடித்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
இவர்களுக்கு அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவது நோக்கமில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே அரசியல் செய்கிறார்கள். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வரும் தகுதி அவர்களிடம் இல்லை. வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது.
அம்மாவின் கட்சியை மீட்டெடுப்பதுதான் அமமுகவின் நோக்கம். அம்மாவின் உண்மையான இயக்கம் அமமுகதான். அம்மாவின் இயக்கத்தை ஜனநாயக முறைப்படி மீட்டெடுக்க வேண்டும். அதற்கு குக்கர் சி்ன்னம் வெற்றி பெற வேண்டும்.
தற்போது அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் நம்மிடம் வர முடியாமலும் கட்சிக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர், கூடிய விரைவில் நம்மிடம் வந்து சேர்வார்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வர வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அமமுக கட்சியை கொண்டு செல்ல வேண்டும். அமமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஆக.15-ல் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதை வெற்றிகரமாக நடத்துவோம். யாருக்காகவும் எதற்காகவும் நான் பின் வாங்கப்போவதில்லை” என்று பேசியுள்ளார் டிடிவி தினகரன்.
- க.சீனிவாசன்