பாஜகவை தொடர்ந்து அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அமமுக கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி முன்னிலையில் இன்று(மார்ச் 12) அதிமுகவில் இணைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அதற்காக நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேருந்தில் வெளியே வந்தார்.
அப்போது அவருடன் பயணம் செய்த அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கோஷம் எழுப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் நேற்று வைரலானது.
அத்துடன் எடப்பாடியை விமர்சித்த ராஜேஷ்வரனை மதுரை விமான நிலையத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் சிலர் தாக்கும் காட்சியும் வெளியானது.
இதனையடுத்து, ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் 6பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகங்கையில் நேற்றிரவு பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய எடப்பாடியை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்துள்ளனர் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளரும், மயிலாடுதுறை – நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பாளருமாக இருந்த கோமல் ஆர்.கே.அன்பரசன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை நிலையச் செயலாளரும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.K.உமாதேவனும் தன்னை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
அண்மையில், தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார் இணைந்ததை தொடந்து அக்கட்சியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடகாவில் ஸ்டூடியோ… பங்குச் சந்தையில் நிதி திரட்டும் ஐசரி கணேஷ்
2019-க்கு பிறகு சதம் அடித்த கோலி