அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடர முடியாது. அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இந்த கிளினிக்களுக்கு 1,820 மருத்துவர்களும், 1,420 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களும் ஓராண்டுக் கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்கள்.
அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே கொரோனா பேரிடர் தொடங்கியது.
எனவே அந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்குப் பின்பு அந்த கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவு கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் அந்த மருத்துவர்கள் அனைவருமே பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தது.
இந்த விவகாரம் குறித்து அப்போது பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“அம்மா மினி கிளினிக்கு வேலைக்குச் சேர்க்கப்பட்ட மருத்துவர்கள் அனைவருமே ஒரு வருட காலத்துக்குத் தற்காலிக பணி என்று எழுதிக் கொடுத்துத்தான் பணிக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அதன்படிதான், அவர்கள் அனைவருமே கடந்த மார்ச் மாதத்துடன் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், அம்மா மினி கிளினிக் திட்டம் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய திட்டங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (நவம்பர் 11) செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், “அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டம் முடிந்து விட்டது.
அதை மீண்டும் தொடரவும் முடியாது. அதே சமயம் நகர்ப்புற நலவாழ்வு மையம் என்பது ஐந்து ஆண்டுக்கான திட்டம். இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவு பெற்றாலும், அதை நீட்டிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாமா?