பிரதமர் மோடி இன்று (நவம்பர் 11) தமிழகத்துக்கு வந்து திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா சென்னை வருகிறார்.
இன்று (நவம்பர் 11) இரவு 11 மணிக்கு மேல் சென்னை வந்தடையும் அமித்ஷா முதலில் ஹோட்டல் லீலா பேலஸில் தங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமித்ஷா அந்த ஹோட்டலில் தங்கி தான் நள்ளிரவு வரை அதிமுக தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மீண்டும் அதே ஹோட்டலில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை ஆளுநர் மாளிகையிலேயே தங்குவார் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் அமித்ஷா நாளை (நவம்பர் 12) இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோடு ஆளுநர் ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கலைவாணர் அரங்கத்தில் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அமித்ஷா அங்கேயே தனது மதிய உணவை எடுத்துக்கொண்டு… நாளை பிற்பகல் 2 மணிக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு செல்வதாக தமிழக பாஜக நிர்வாகிகள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
தமிழக பாஜக அலுவலகத்தில் மாநில பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்துகிறார் அமித்ஷா.
இதற்கிடையில் இன்று இரவு அல்லது நாளை காலை அமித்ஷாவை சந்திக்க அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்.
அமித் ஷாவின் இந்த நிகழ்ச்சி நிரல் கடைசி நேர மாற்றத்துக்கு உட்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
-ஆரா
6 பேர் விடுதலை- திமுகவை எதிர்த்து கண்டனத் தீர்மானம்: காங்கிரஸ் ஜி.கே. முரளிதரன்
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்!