புல்வாமா தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநராக இருந்தபோதே அவர் ஏன் இதை சொல்லவில்லை? என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
புல்வாமா தாக்குதல்!
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர்கள் உட்பட 44 பேர் வீரமரணம் அடைந்தனர். அப்போது 2019 மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
சுதந்திர இந்தியாவில் கருப்பு நாளாக 2019, பிப்ரவரி 14 பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் இருந்தார்.
இந்நிலையில் ஆங்கில ஊடகமான தி வயருக்கு சத்ய பால் மாலிக் அளித்த பேட்டி விவாத பொருளாக மாறியுள்ளது.
அப்படி அவர் என்ன சொன்னார்?
“சிஆர்பிஎஃப் வீரர்கள் தாங்கள் செல்வதற்காக விமானம் கேட்டனர். ஏனென்றால் அவ்வளவு பெரிய கான்வாய்கள் சாலையில் செல்ல முடியாது. எனவே அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கிடம் கேட்டனர். 5 விமானங்கள் தான் கேட்டனர். ஆனால் கொடுக்கவில்லை. என்னிடம் கேட்டால் கொடுத்திருப்பேன்.
இந்த தவறால் தான் அன்று தாக்குதல் நடந்தது. இது நம்முடைய தவறு என்று பிரதமர் மோடியிடம் சொன்னேன். விமானங்கள் கொடுத்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்றேன். ஆனால் அவர் அமைதியாக இருக்குமாறு கூறுவிட்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதையேதான் சொன்னார். அவர் என்னுடைய கிளாஸ்மெட் என்பதால் எங்களுக்குள் அனைத்து விஷயங்களையும் பேசுவோம். அவரும் சத்யபால் இதை வெளியே சொல்ல வேண்டாம் என்றார்.
புல்வாமா சம்பவத்தில் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற கார் பாகிஸ்தானில் இருந்து வந்தது. இது ஜம்மு காஷ்மீர் சாலைகள் மற்றும் கிராமங்களில் 10-15 நாட்களாக யாருக்கும் தெரியாமல் சுற்றித் திரிந்திருக்கிறது. எனவே புல்வாமா சம்பவத்துக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்” என்று கூறியிருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு
அதே பேட்டியில் பாஜக நிர்வாகி ராம் மாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டை குறிப்பிட்டு பேசிய சத்ய பால் மாலிக், “நான் ஆளுநராக இருந்த போது, ஒரு நாள் காலை ஏழு மணியளவில் ராம் மாதவ் வந்து, ஒரு நீர்மின் திட்டத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு காப்பீட்டுத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி அளித்தால், 300 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறினார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்” என்று சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.
சிபிஐ வழக்கு
இந்த குற்றச்சாட்டை சத்ய பால் மாலிக் கூறியது முதன்முறையல்ல. ஏற்கனவே இதுதொடர்பாக அவர் பேசியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் கிரு நீர்மின்சார திட்டத்துடன் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஒப்பந்தங்கள், மற்றும் ரூ. 2,200 கோடி மதிப்பிலான சிவில் பணிக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் ஊழல் முறைகேடு நடந்ததாக சத்யபால் மாலிக் கூறியதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இரு எப்.ஐ.ஆர் பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.
தற்போது புல்வாமா தாக்குதல் குறித்து சத்ய பால் மாலிக் கூறியிருக்கும் நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சில விஷயங்கள் தெளிதெளிவுப்படுத்த வேண்டும் என்று சிபிஐ சத்ய பால் மாலிக்கிற்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. ஏப்ரல் 27 அல்லது 28 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு கூறியிருக்கிறது.
கைதா இல்லையா?
சத்ய பால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான், பஞ்சாப் என மற்ற மாநிலங்களில் இருந்து அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அருகில் இருந்த பூங்காவில் கூடியிருக்கின்றனர்.
இதனால் அனுமதியின்றி கூடியதாக சத்ய பால் மாலிக் ஆதரவாளர்களை டெல்லி ஆர்.கே புரம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றிருக்கின்றனர். இதனையடுத்து சத்யபால் மாலிக்கும் காவல் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனால் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது.

இதை மறுத்துள்ள டெல்லி போலீசார், அவராகத்தான் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரை காவல் நிலையத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்று சொல்லிவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
அமித்ஷா கேள்வி!
இப்படி சத்ய பால் மாலிக் விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா டுடே ஊடகம் நடத்திய கர்நாடகா வட்டமேசை 2023 என்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “மறைக்க வேண்டிய எதையும் பாஜக செய்யவில்லை. இந்த பிரச்சினை(புல்வாமா தாக்குதல்) பொது மேடையில் விவாதிக்கக் கூடாது. ஒருவேளை முறைகேடு நடந்திருந்தால், இதில் எதேனும் தவறு நடந்திருப்பதாக அவருக்கு தெரிந்திருந்தால், அதை அவர் பதவியில் இருக்கும் போதே பேசியிருக்கலாம். அதை தவிர்த்து இப்போது ஏன் கூற வேண்டும். இதன் நம்பகத் தன்மையை சரிபார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புல்வாமா தாக்குதல் குறித்தும், சத்ய பால் மாலிக் கூறியது குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், அமித் ஷா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பிரியா
அரசு பங்களாவை காலி செய்த ராகுல்
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!