வைஃபை ஆன் செய்ததும் அதிமுக, பாஜக தலைவர்களின் பரபரப்பான பிரஸ்மீட் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதன் முதலாக பேட்டி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை… அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று கடுமையாக தாக்கினார். இதற்கு பதிலளித்து இன்று (ஜூன் 6) கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ‘அண்ணாமலை முதலில் தன் மாநிலத் தலைவர் பதவியை காப்பாற்றிக் கொள்ளட்டும். பாஜகவில் மாநிலத் தலைவர்களாக தமிழிசை, எல்.முருகன் போன்றோர் இருந்தபோது கூட்டணி நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அண்ணாமலையால்தான் கூட்டணி முறிந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியாய் போட்டியிட்டிருந்தால் 31-35 இடங்கள் கிடைத்திருக்கும்’ என்று கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த அண்ணாமலை, ‘அதிமுகவோடு எப்போதும் கூட்டணி கிடையாது’ என்று அறிவித்தார்.
இதற்கிடையே இன்று சென்னையில் பேட்டியளித்த முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை, ‘வேலுமணி சொன்னதில் தவறு இல்லை. அதிமுகவும் -பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தால் தமிழ்நாட்டில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் கூட்டணி வியூகம் அமைக்கச் சொன்னோம். ஆனால் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை’ என்று பேசினார்.
மேலும், ‘நான் முன்னாள் ஆளுநராக இதைச் சொல்லவில்லை. முன்னாள் மாநிலத் தலைவராக சொல்கிறேன்’ என்றும் பேசியிருக்கிறார் தமிழிசை.
இதுகுறித்து பாஜக மேலிட வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘அண்ணாமலை முதலில் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகனிடம், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறினார். அதற்குப் பின் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘தேர்தல் தோல்விக்குப் பின் இந்தியா முழுதும் மாநிலத் தலைவர்களை தேசியத் தலைமை மாற்றப் போகிறது. அதில் தமிழ்நாடும் இடம்பெற்றிருக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
அப்படியெனில் இப்படிப்பட்ட தகவல்களை அறிந்துகொண்டுதான் கேசவ விநாயகன் போன்றவர்களிடம், ‘நான் ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்று அண்ணாமலை சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல… செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கட்சியை வளர்க்கத்தான் என்னை இங்கே அனுப்பினார்கள். இன்னொரு கட்சியோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டுதான் ஆக வேண்டுமென்றால் வேறு ஒரு ஆளை போட்டுக்கொள்ளட்டும்’ என்றும் கூறியிருக்கிறார்.
ஆக அண்ணாமலை தன்னை மாற்றப் போகிறார்கள் என்பதை ஸ்மெல் செய்துகொண்டு… அதற்கான கிரவுண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
மேலும் அவர்கள், ‘அமித் ஷா தேர்தல் முடிவுகளுக்குப் பின் அண்ணாமலை மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் அதிமுக கூட்டணி வேண்டாம் என்றும், தனியாக நின்று கட்சி 20% க்கு மேல் வாக்குகள் பெறும் என்றும் அண்ணாமலை தேசிய தலைமையிடம் உறுதியளித்தார். ஆனால் அப்போதே அமித் ஷா இதை ஏற்காமல், ‘கூட்டணி பல மாநிலங்களில் இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியை புதுப்பித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார். ஆனால் மோடிதான், ‘அண்ணாமலை சொல்வதை பரிட்சித்துப் பார்ப்போம்’ என்று சொன்னார்.
தேர்தல் முடிவுகளில் கட்சிக்கு பெரிய அளவு வளர்ச்சியும் இல்லை, கூட்டணி இல்லாததால் எம்பி.க்களும் இல்லை. எனவே அண்ணாமலை மீதான கோபம் அமித் ஷாவுக்கு அதிகமாகியிருக்கிறது.
இதையெல்லாம் அறிந்துதான் தமிழிசை தேர்தலுக்குப் பின் அண்ணாமலைக்கு எதிரான கருத்துகளை நேரடியாக பகிரங்கமாக முன் வைக்கத் தொடங்கியிருக்கிறார். இதற்கு முன் அண்ணாமலைக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாக முன் வைக்க பாஜக நிர்வாகிகள் தயங்கினார்கள். ஆனால் தமிழிசை இப்போது தடாலடியாக அண்ணாமலைக்கு எதிராக வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தேர்தலில் தோற்றாலும் தென் சென்னையில் அக்கா தமிழிசை மக்கள் தொடர்பு அலுவலகம் என்ற அலுவலகத்தைத் திறந்தார் தமிழிசை. அதற்கு அண்ணாமலையை அவர் அழைக்கவில்லை. இந்த விழாவில்தான் அண்ணாமலைக்கு எதிராக வெடித்திருக்கிறார் தமிழிசை. மேலும் கூட்டணி குறித்தெல்லாம் அண்ணாமலை பேச முடியாது, அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
கூட்டணி விஷயத்தில் மட்டுமல்ல… நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு நேற்று அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். அதுபற்றி கருத்து தெரிவித்த தமிழிசை, ‘சீமானின் வளர்ச்சி நாட்டுக்கு எதிரானது’ என்று கூறியிருக்கிறார்.
ஆக அண்ணாமலையே தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதுபோல இந்தியா முழுதும் பாஜக தோல்வி அடைந்த மாநிலத் தலைவர்கள் மாற்றப்படும்போது அவரும் மாற்றப்படுவார். இதை அறிந்துகொண்டுதான் அண்ணாமலைக்கு எதிராக தனது விமர்சனங்களை கூர் தீட்டியிருக்கிறார் தமிழிசை. அடுத்த மாநிலத் தலைவராக மீண்டும் ஆக வேண்டும் என்ற வேகம் தமிழிசையின் தற்போதைய நடவடிக்கைகளில் தெரிகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுக்கெல்லாம் கூட்டணி உடையுமா? அப்டேட் குமாரு
கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி – சென்னை அணி வெற்றி!