பாக்கல… பாக்கல…பாக்கல… : அமித்ஷா அழைப்பு – நழுவிய எடப்பாடி

Published On:

| By Kavi

அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவு திறந்திருப்பதாக அமித்ஷா கூறியது பற்றி அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன என உள்துறை அமைச்சர் அமித் ஷா தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றாகிவிட்டது, 3ஆவது அணி அமைக்க திட்டமா? என்று எழுப்பிய கேள்விக்கு,  ‘கூட்டணிக்காக அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்று அமித்ஷா பதிலளித்துள்ளார்.

இது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  “பாஜக வேண்டுமானால் அதிமுகவுக்கு கதவைத் திறந்து வைக்கலாம். ஆனால் பாஜகவுக்கான கதவை சாத்தி பெரிய பூட்டு போட்டுவிட்டோம். எந்த காலத்திலும் இதுதான் முடிவு” என்று தெரிவித்தார்.

அமித்ஷா கூறியது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அமித் ஷா எந்த கட்சி பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மோடியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும் எங்களது கதவு திறந்திருக்கும் என்று தான் சொல்லியுள்ளார்.

எந்த கட்சியை குறிப்பிட்டு கேட்டிருந்தாலும் இதைதான் அமித் ஷா சொல்லியிருப்பார். எல்லோருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கதவுகள் திறந்திருக்கும். ஏன், திமுக கூட்டணியில் இருந்துகூட யார் வேண்டுமானாலும் வரலாம்.

கூட்டணிக்காக யாரையும் வற்புறுத்தப் போவதில்லை. கூட்டணிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அந்தந்த கட்சிகளின் விருப்பம். அமித் ஷா பேசியதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம். இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து தெளிவான முடிவு கிடைக்கும்” என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7) சேலம் பத்ரகாளியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது, அமித்ஷாவின் பதில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர், “நான் பார்க்கவில்லை… பார்த்தால் சொல்கிறேன்… காலையில் நான் பேப்பர் பார்க்கவில்லை” என பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யார் யார்?

Rose day: காதலி மனதில் இடம்பிடிக்க எந்த நிற ரோஜா கொடுக்கலாம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel