“அமித்ஷா வருகையால் மு.க.ஸ்டாலினுக்கு ஜூரம்” : அண்ணாமலை

அரசியல்

அமித்ஷா வருகையால் முதலமைச்சருக்கு ஜூரம் வந்துவிட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்று வரும் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டத்தில் அமித் ஷாவுக்கு முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

அப்போது அவர், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார் என்றதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. சேலத்தில் அவருக்குக் காய்ச்சல் ஜுரம் தொடங்கிவிட்டது, அதனால் தான் 9 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். முதலமைச்சரே அதைச் சொல்வதற்குத் தான் இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அமித்ஷா வரும் போது மின் விளக்கை வேண்டுமானால் நிறுத்தலாம். ஆனால் பாஜக தொண்டர்களின் எழுச்சியை நிறுத்த முடியாது.

2024 பாராளுமன்றத் தேர்தலில், இன்று காலை அமித் ஷா சொன்னது போல என்.டி.ஏ கூட்டணியிலிருந்து 25 எம்.பி.க்கள் செங்கோல் ஆசீர்வாதத்தோடு தமிழகத்திலிருந்து புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள்.

10 ஆண்டுக்காலம் திமுக யுபிஏ கூட்டணியிலிருந்தீர்கள். இந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள் என்று நானே சொல்கிறேன்.

விவசாயிகளை அழிப்பதற்காக டெல்டா பகுதியான தஞ்சாவூரில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் தான் நீங்கள் செய்த முதல் சாதனை.

2ஜி ஊழல் செய்து, விஞ்ஞான முறையில் எப்படி ஊழல் செய்யலாம் என உலகிற்கு ஊழல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கும் போது ஒரு லட்சம் பேரை கொன்று குவித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஏர் கூலர் முன் அமர்ந்து தங்கள் குடும்பத்திற்கு எப்படி கேபினட் மந்திரிகளை வாங்க வேண்டுமென்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

தொடர் மின்வெட்டு திட்டம், மருத்துவ படிப்பு சீட்டை ஏழை மக்களுக்கு கொடுக்காமல், பணக்காரர்களுக்கு மட்டும் கொடுக்கும்படியான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.
வெளிநாட்டிலிருந்து முதலமைச்சரே சட்ட விரோதமாக ஹம்மர் காரை இறக்குமதி செய்ய புதிய திட்டம் கொண்டு வந்தீர்கள். அதற்காக உங்கள் மீது சிபிஐ வழக்கு உள்ளது. இதெல்லாம் தான் உங்கள் சாதனை” என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.

பிரியா

தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன? – ஸ்டாலினுக்கு அமித்ஷா பதில்!

விமர்சனம்: போர் தொழில்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *