வைஃபை ஆன் செய்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டி பற்றிய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்தார்.
இந்த சந்திப்பின்போது அமித் ஷா, ‘திமுக வலிமையாக இருக்கும் நிலையில் அந்த எதிரியை வீழ்த்தும் அளவுக்கு நாமும் வலிமையாக இருக்க வேண்டாமா? அதிமுகவின் மற்ற பிரிவுகளை எல்லாம் நீங்கள் ஏன் ஒன்றிணைக்கக் கூடாது?’ என்று கேட்டிருக்கிறார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மனதில் வைத்துதான் அமித் ஷா இவ்வாறு கேட்டிருக்கிறார். மேலும் அதற்கு சில நாட்கள் முன்புதான் திருச்சியில் ஓபிஎஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை கூட்டியிருந்தார்.
இந்த நிலையில் அமித் ஷாவுக்கு பதிலளித்த எடப்பாடி, ‘அதிமுக 99 சதவிகிதம் இப்போது எங்களிடம்தான் இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் ஒரு சதவிகிதத்தினரும் எங்களை நோக்கி தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் லீடர்ஸும் இல்லை, கேடர்ஸும் இல்லை. எனவே அதிமுக இப்போது வலிமையானதாகத்தான் இருக்கிறது. அதிமுகவின் வலிமைக்கு எந்த குறைவும் இல்லை. திமுகவுக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால், வரும் தேர்தலில் நமது கூட்டணி வலிமையாக இருக்கும்’ என்று பதிலளித்திருக்கிறார். இதற்கு அமித் ஷா மறுப்பு ஏதும் சொல்லவில்லை.
இந்த நிலையில் சந்திப்பு முடிந்ததும் வெளியே வந்த எடப்பாடி, ‘நாம கோர்ட், தேர்தல் ஆணையம், கட்சினு எல்லா நிலையிலயும் நம்மை நிரூபிச்சும் அமித் ஷா இன்னும் ஓபிஎஸை சேர்த்துக்க மாட்டீங்களானு கேட்குறாரே?’ என வருத்தப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் அந்த டெல்லி சந்திப்பு முடிந்த சில நாட்களுக்குப் பின் இன்று (மே 3) அமித் ஷா கர்நாடக தேர்தல் தொடர்பாக நியூஸ் 18 நெட்வொர்க் சேனலுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவின் எடப்பாடி-ஓபிஎஸ் விவகாரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ’அதிமுகவின் உள் விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. அவர்கள் வேண்டுமானால் சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் பேசுவதும் பேசாததும் என்னைச் சார்ந்தது இல்லை’ என்று தெளிவாக கூறிவிட்டார்.
ஓபிஎஸ் சிடம் எந்த பலமும் இல்லை, அவரோடு பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், அமித் ஷாவின் இந்த கருத்து எடப்பாடியின் கருத்தை ஆமோதிப்பதாகவே இருக்கிறது.
இந்தத் தகவல் தொலைக்காட்சிகளில் வந்தபோது சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் இருந்தார் எடப்பாடி. ‘ஏற்கனவே நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எல்லாம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.
இந்தியாவை தற்போது ஆளுங்கட்சி என்ற வகையில் பாஜகவின் அரசியல் அங்கீகாரத்தை வெளிப்படையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் எடப்பாடி. அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமித் ஷாவின் இன்றைய அப்டேட் அமைந்திருக்கிறது.
இந்த பேட்டியின் மூலம் எடப்பாடி -பன்னீர் இடையே தான் தலையிடப் போவதில்லை என்று அமித் ஷா வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். ஓபிஎஸ் சின் பலம் என்ன என்பதை முற்றிலும் உணர்ந்துதான் அமித் ஷா இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இது எடப்பாடியின் அரசியல் பாதையில் இருந்த கடைசி தடையையும் தகர்த்துவிட்டது’ என்கிறார்கள் நெடுஞ்சாலை நகர் வட்டாரத்தில்.
இதையடுத்து பன்னீர், தினகரன் ஆதரவாளர்களை அதிமுகவுக்கு கொண்டுவருவதில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
மனோபாலா மறைவு: நடிகர் விஜய் நேரில் அஞ்சலி!.
ஆதிக்கம் செலுத்திய சென்னை: தப்பி பிழைத்த லக்னோ!