நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மற்றும் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 10) சென்னை வருகிறார்.
மஹாராஷ்டிராவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 8.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார்.
இரவு 9:05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கும் அவர், 9.45 மணியளவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.
பின்னர் நாளை காலை 11 மணியளவில் கோவிலம்பாக்கத்தில் நடைபெற இருக்கும் தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக்கூட்டத்தில், மாநில பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்க உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து நாளை மதியம் 1.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வேலூா் செல்கிறார் அமித் ஷா. பகல் 2.45 மணிக்கு பள்ளிகொண்டாவில் நடைபெற உள்ள மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.
பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு மாதத்திற்குள் 66 பொதுக்கூட்டங்களை நடத்தும் தமிழக பாஜகவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பின்னர் வேலூரில் இருந்து நாளை மாலை 4 மணியளவில் சென்னைக்கு வரும் அவா், மாலை 5.50 மணிக்கு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்த பயணத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்வது முக்கிய பங்கு வகிக்கும்.
இதற்கிடையே இன்று இரவு அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா அப்பாயின்ட்மென்ட் யாருக்கு? செந்தில்பாலாஜியை காக்க ஸ்டாலின் வியூகம்!