டிஜிட்டல் திண்ணை: நிதிஷை ஆஃப் பண்ணிய அமித் ஷா… நாயுடுவிடம் தொடரும் பேரம்! -சபாநாயகர் தேர்வுக்குப் பின்னணியில் ஷாக் ஆபரேஷன்!
வைஃபை ஆன் செய்ததும், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 ஆவது மக்களவையின் சபாநாயகர் யார்?” என்ற கேள்வி இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதற்கு பதிலளித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“வரும் 24 ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் தற்காலிக சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து 26 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்தெடுக்கப்படுகிறார்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 17 நாடாளுமன்றங்களிலும் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்ததே இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு சபாநாயகர் போட்டியின்றிதான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதே மரபுப்படி இம்முறையும் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது தேர்தல் நடைபெறுமா என்பது தேசிய அரசியலில் விவாதமாகியுள்ளது.
கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்றங்களில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்ததால் முறையே சுமித்ரா மகாஜன், ஓம் பிரகாஷ் பிர்லா ஆகியோர் ஆளுங்கட்சியால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இப்போது மோடி கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்துகிறார். அதனால் கூட்டணிக் கட்சிகளோடும் ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதற்காக பாஜக சீனியரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ் நாத் சிங்கை பாஜக மேலிடம் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது.
அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியினரோடும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்தியா கூட்டணியினரோடும் ஆலோசனை நடத்தி போட்டியின்றி சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் ராஜ் நாத் சிங்கிற்கு அளிக்கப்பட்டுள்ள டாஸ்க்.
அதன்படியே அவர் என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளோடும் இந்தியா கூட்டணிக் கட்சிகளோடும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த வகையில் கடந்த சனிக் கிழமையன்று டெல்லியில் உள்ள ராஜ் நாத் சிங்கின் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருக்கும் ராஜ் நாத் சிங் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் கடந்த நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மத்திய அமைச்சர் லாலன் சிங் கலந்துகொண்டார். இன்னொரு முக்கிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் சார்பில் இக்கூட்டத்தில் யாரும் கலந்துகொள்ளவில்லை. அதனால் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பாஜகவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் சபாநாயகர் தேர்வில் பாஜகவின் முடிவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இதை அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
ஆனால் தெலுங்குதேசம் கட்சியோ சபாநாயகர் தேர்வில் கருத்தொற்றுமை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சபாநாயகர் தேர்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் என்ன நடக்கிறது என்று விசாரித்தபோது பல அதிரடி சுவாரஸ்யங்கள் கிடைத்தன.
”தெலுங்கு தேசம் சார்பில் கேட்ட அமைச்சர்களின் எண்ணிக்கையோ, கேட்ட துறைகளோ கொடுக்கப்படவில்லை. ஒரே ஒரு கேபினட் அமைச்சர், ஒரே ஒரு இணையமைச்சர் பதவிதான் வழங்கப்பட்டுள்ளது. அதனால் நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு வழங்குமாறு தெலுங்கு தேசம் பாஜகவிடம் கேட்டது. ஏற்கனவே தெலுங்கு தேசம் சார்பில் பாலயோகி சபாநாயகராக இருந்ததை சுட்டிக் காட்டி இந்த கோரிக்கையை வைத்தது தெலுங்கு தேசம். ஆனால் பாஜக இதற்கு உடன்படவில்லை. நாங்கள் 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நீங்கள் 16 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளீர்கள். நாடாளுமன்ற மரபுப்படி நாங்கள்தான் சபாநாயகரை முன் மொழிய வேண்டும்.
வேண்டுமானால் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரியை சபாநாயகர் ஆக்கலாம் சம்மதமா என்று கேட்டிருக்கிறார்கள் பாஜக தரப்பினர். ஆனால் தெலுங்குதேசம் கட்சியினரோ, ‘புரந்தேஸ்வரி ஆந்திராவைச் சேர்ந்தவர். என்.டி.ராமராவின் மகள் என்றாலும் அவர் பாஜகவின் ஆந்திர மாநில தலைவர். உங்கள் கட்சி பிரதிநிதிதானே… இதில் தெலுங்கு தேசத்துக்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் பாஜக சபாநாயகர் பதவி தங்களுக்கே என்பதில் உறுதியாக இருக்கிறது.
சபாநாயகர் தேர்வில் இப்படி ஒருமித்த முடிவை எடுப்பதற்காக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு முன்பே பாஜகவின் தலைமை பல விரிவான செயல்திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது என்கிறார்கள் பாஜக டெல்லி சோர்ஸுகள்.
”பாஜகவுக்கு இப்போது தெலுங்குதேசம் 16, ஐக்கிய ஜனதாளம் 12 ஆகிய கட்சிகள் முக்கியமான ஆதரவு சக்திகளாக இருக்கிறார்கள். இவர்களின் அழுத்தத்துக்கு உள்ளாகாமல் இருக்கவும் இவர்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருக்கவும் அமித் ஷாவின் டீம் மோடி பதவி ஏற்புக்கு முன்பே பல ரகசிய ஆபரேஷன்களைத் தொடங்கிவிட்டது.
என்.டி.ஏ,. இந்தியா கூட்டணி அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பிக்கள் ஒரு கட்சிக்கு ஒருவர் அல்லது இருவர் என்ற அளவில் இருக்கிறார்கள்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு முன்பே இவர்கள் அனைவரிடமும் பேசி ஒரு எம்பிக்கு நூறு கோடி ரூபாய் என்று பாஜக தரப்பில் ஆஃபர் அளிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
இதுமட்டுமல்ல… ஐக்கிய ஜனதா தள தலைமைக்கும் பாஜகவின் இந்த ஆபரேஷன் டீமினர் தொடர்புகொண்டு சில நிபந்தனைகளையும், சலுகைகளையும் அளித்திருக்கிறார்கள்.
அதாவது, ‘பிகாரில் நிதிஷ்குமார் பாஜக தயவின் பேரில்தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார். அங்கே அவர் முதல்வராக தொடர வேண்டுமென்றால் டெல்லியில் பாஜக சொன்னதை கேட்க வேண்டும்.
நிதிஷ்குமார் இப்போது மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கிறாரே லாலன் சிங், அவரது மனைவி நிதிஷ்குமாருக்கு நெருங்கிய தோழி. இது ஐக்கிய ஜனதா தள வட்டாரங்களில் அனைவரும் அறிந்ததுதான். இந்த நெருக்கம் பற்றிய மேலும் தகவல்களும் இருக்கின்றன.
இதையெல்லாம் குறிப்பிட்டு ஐக்கிய ஜனதா தளத்துக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை ஆஃபராக முன் வைத்தது பாஜக ஆபரேஷன் டீம். அதில் இருந்து, ஐக்கிய ஜனதா தளம் பிரச்சினை எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டது.
அதேபோல ராம் விலாஸ் பாஸ்வானின் 5 எம்பிக்களுக்கும் தலா 100 கோடி என 500 கோடி பேசப்பட்டிருப்பதாக தகவல்.
இதேபோனற அதிரடி ஆஃபரை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுக்கும் அளிக்க முன் வந்தது பாஜகவின் ஆபரேஷன் டீம்.
ஆனால் சந்திரபாபு நாயுடுவோ… ‘எனக்கு தனிப்பட்ட முறையில் பணம் வேண்டாம். ஆந்திர மாநிலம் கடுமையான கடன் சுமையில் மூழ்கியிருக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தாக 2.5 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஃபண்ட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வருடத்துக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம், விவசாயிகளுக்கு வருடம் 20 ஆயிரம் ரூபாய், மூத்த குடிமக்களுக்கு 2 சென்ட் நிலம் இலவசம், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகள் வழங்கி ஜெயித்திருக்கிறார். அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் மாதம் 2600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆந்திர அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் இருக்கிறது. எனவே 2.5 லட்சம் கோடி சிறப்பு நிதி வேண்டும் என்று நாயுடு கோரிக்கை வைத்தார்.
ஆனால் பாஜக தரப்பிலோ ஆந்திராவுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியாக தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு சந்திரபாபு நாயுடு கடுமையான வருத்தத்தில் இருக்கிறார். அதனால்தான் சபாநாயகர் தேர்வில் அவர் இன்னும் பதில் சொல்லவில்லை. அவரை சமாளிக்கும் ஆலோசனையில்தான் இப்போது டெல்லி பாஜக தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது’ என்கிறார்கள்.
பாஜக தரப்பில் இப்படி ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க… இந்தியா கூட்டணி தரப்பில், ‘நாடாளுமன்ற மரபுப்படி சபாநாயகர் ஆளுங்கட்சி தரப்பும் துணை சபாநாயகர் எதிர்க்கட்சிக்கும் தரப்படும். 2014 இல் அதிமுகவின் தம்பி துரை துணை சபாநாயகராக இருந்தார். 2019 இல் துணை சபாநாயகர் பதவியை நிரப்பவே இல்லை மோடி அரசு. இந்த நிலையில் 2024 இல் எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கிறோம்.
எனவே துணை சபாநாயகர் பதவியை இந்தியா கூட்டணிக்கு ஒதுக்கினால் சபாநாயகர் தேர்வில் ஒத்துழைப்போம். இல்லையென்றால் போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று குற்றவியல் சட்டங்கள் : அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!
கோவை: மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை… தவறி விழுந்த பெண்… ஒப்பந்ததாரருக்கு அபராதம்!