உள்துறை அமைச்சர் இன்று (ஜூலை 28) தமிழகம் வருகை தர உள்ளதால் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ’என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் செல்ல உள்ளார். இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக மாலை 4 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் அமித் ஷா, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிறார்.
மாலை 5.45 மணியளவில் நடைப்பயணத்தை தொடங்கி வைத்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டுள்ள தொடக்க விழா மேடையில் பேசவுள்ளார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராமேஸ்வரம் வருவதால் அங்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 11ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 10 ஆம் தேதி இரவு அமித் ஷா சென்னை வந்திருந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நேரத்தில் ஜிஎஸ்டி சாலையில் மின் தடை ஏற்பட்டது. இதனை திட்டமிடப்பட்டது என்று கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் வரும் அமித்ஷா வருகையின் போது அங்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மோனிஷா
கொடநாடு வழக்கு இடைக்கால அறிக்கை: சிபிசிஐடிக்கு நீதிபதி கேள்வி!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!