டிஜிட்டல் திண்ணை: சென்னையில் அமித் ஷா மகன்… சந்திக்கும் சபரீசன் நண்பர்கள்!   

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் ஐபிஎல் போட்டிகளில் இன்றைய ஆட்டம் சென்னையில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்  இடையே நடைபெறுவதை அறிவிக்கும் விளையாட்டுச் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

டிஜிட்டல் திண்ணையில் விளையாட்டுச் செய்திகளா என்ற ஆச்சரியத்துக்கு ஒரு ஸ்மைலியை ரெஸ்பான்ஸாக  கொடுத்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதை மையமாக வைத்து அரசியல் இன்னிங்ஸ்களும் அவ்வப்போது ஆடப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.  சில நாட்களுக்கு முன்பு  சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தின் இடையே  மைதான கேலரியில் முதலமைச்சர் ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன்- ஓ. பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு நடைபெற்றது நினைவிருக்கும்.

இன்று குஜராத், சென்னை அணிகள் கிரிக்கெட் ஆடுகின்ற நிலையில் இதை பார்ப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், குஜராத்தைச் சேர்ந்தவரும்,   மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய்ஷா சென்னை வந்திருக்கிறார் என்பது தான் இந்த விளையாட்டுக்குள் இருக்கும் அரசியல் சுவாரஸ்யம்.

கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் சுமார் 6 நாட்கள் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு வாரம் சோதனை நடைபெற்ற நிலையிலும் இந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறை இப்போது வரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

ரெய்டு முடிந்த சில நாட்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் எங்களிடமிருந்து மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியே வந்த தகவல் தவறானது என்றும் எங்கள் நிறுவனத்தின் மீது எந்த குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது, எங்கள் மீதான களங்கம் துடைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து.


அதே நேரம் சபரீசன்  தொடர்புடைய பிசினஸ் புள்ளிகள் ஹைதராபாத்தில் ஜெய்ஷாவின் தொடர்பில் உள்ளவர்களுடன் பிசினஸ் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அது கூட வருமான வரித் துறையின் அமைதிக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தன‌.

இதுகுறித்து டிஜிட்டல் திண்ணையிலும் ரெய்டுக்குப் பின் அமைதி… ஐடி பம்முகிறதா, பாய்கிறதா? என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதே நேரம் வருமான வரித்துறை சோதனைகளை முடித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது… புயலுக்கு முன்பு அமைதியை போலத்தான் இந்த அமைதி என்றும் வருமானவரித் துறை வட்டாரங்களில் இருந்து சிலர் கூறுகிறார்கள்.
இப்படி இருதரப்பு கருத்துக்கள் வந்து கொண்டிருந்த போதும் சபரீசன் இந்த ரெய்டு குறித்து தனது மாமனார் முதலமைச்சர் ஸ்டாலினிடம், ‘எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் போய்க்கிட்டு இருக்கு’ என்றுதான் சொல்லி இருக்கிறார்.
ஜி ஸ்கொயர் பரபரப்புகள் சற்று ஓய்ந்ததாக கருதப்பட்ட நிலையில் கடந்த வாரம் சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா  தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.


லைக்காவின் சிஇஓ வாக இருக்கும் பாமகவின் முன்னாள் இளைஞர் அணி செயலாளரும்,  அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி. கே. மணியின் மகனுமான தமிழ் குமரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடுமையான முறையில் விசாரித்திருக்கிறார்கள். தமிழ் குமரனிடம் அவர்களின் ஒரே கேள்வி, ‘லைக்காவுக்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்டுக்கும் என்ன தொடர்பு?  இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பணப் பரிமாற்றங்கள் எப்படி எல்லாம் நடந்திருக்கின்றன?’ என்பதுதான்.

கடந்த 2019ல் லைக்கா நிறுவனத்தின் ஆலோசகராக இருந்த ஐங்கரன் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லைக்கா நிறுவனம் ஒரு மோசடி புகாரை அளித்தது. அதாவது ஐங்கரன் கருணா 120 கோடி ரூபாய்க்கு மேல் தங்கள் நிறுவனத்தை ஏமாற்றி விட்டதாக லைகா நிறுவனம் புகார் கொடுத்தது. 

அந்த கருணாகரன் அமலாக்கத் துறையை அணுகி லைகா நிறுவனத்துக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் இடையிலான பல்வேறுபட்ட ரகசிய தொடர்புகள் குறித்து தகவல்களை அளித்ததாகவும் அதன் அடிப்படையிலேயே… கடந்த வாரம் லைகா நிறுவனத்தை குறிவைத்து அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதாகவும் டெல்லி  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் லைகா நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ தமிழ் குமரனிடம் ரெட் ஜெயண்ட் உடனான தொடர்புகள் பற்றியும் துருவித் துருவி விசாரிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். தமிழ் குமரனின் தந்தை ஜிகே மணி மூலமாக இந்த தகவல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.


ஒரு பக்கம் சபரீசனை குறி வைத்து ஜி ஸ்கொயர் ரெய்டுகள் முடிவடைந்த நிலையில்,  அடுத்தது உதயநிதியை குறிவைத்து லைகா நிறுவனத்தின் மீதான அமலாக்கத்துறை ஆபரேஷன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் லண்டனில் இருந்த  அமைச்சர் உதயநிதி லைகா நிறுவனத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்ததாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. 
ஒருபக்கம் சபரீசன், ஒருபக்கம் உதயநிதி என  இரு புறத்திலிருந்தும் ஸ்டாலினுக்கு நெருக்கடிகள் குவிந்து வரும் நிலையில்… 

இன்று கிரிக்கெட் போட்டிக்காக சென்னை வந்திருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா வை சபரீசனுக்கு நெருக்கமான சில  புள்ளிகள் சந்திக்கிறார்கள், எந்த அணி வெற்றி பெறும் என்பது இனிமேல்தான் தெரியும்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கோடை வெப்பம்: பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா?

’’தோனியை அழவைத்த சென்னை அணி”: மனம் திறந்த ஹர்பஜன் சிங்

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *