தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ’என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று மாலை தொடங்க இருக்கும் இந்த நடைபயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து மதியம் 1 மணி அளவில் தனி விமானத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார்.
பின்னர் அங்கு ஒரு ஓட்டலில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு அங்கிருந்து ராமேஸ்வரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் அமைக்கப்பட்டுள்ள நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணி அளவில் வந்து கலந்துகொண்டு பேசுகிறார்.
விழா நிறைவுக்கு பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பும் அவர், இரவில் அங்கு தங்க உள்ளார்.
தொடக்க விழாவிற்காக நாடாளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையின் இறுதிக்கட்ட பணிகளை அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடக்க விழாவில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பாமக தரப்பில் இருந்து அண்ணாமலையின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து யாரும் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை உறுதியாகவில்லை.
எனினும், ஏசி சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அமைச்சரின் அப்டேட்!
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை பிரட்டல் (ஆடி ஸ்பெஷல்)
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
அண்ணாமலை பாதயாத்திரை: அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு!